திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நாயை தாக்கிய விவகாரம்: பேரூராட்சி சுய உதவிக்குழு உறுப்பினர் நீக்கம்; வழக்குப்பதிவு


திருச்சி: மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் பொது சுகாதார பணி மேற்கொண்டு வரும் காமராஜர் ஆண்கள் சுய உதவிக் குழு உறுப்பினராகிய சி.சேகர் என்பவர், மாற்றுப் பணியில் திருச்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தூய்மைப் பணி செய்து வந்தார்.

இந்நிலையில், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலகம் பின்புறம் நேற்று முன்தினம் பணியிலிருந்த சேகர், அங்கு சுற்றித்திரிந்த ஒரு நாயை இரும்புக் கம்பியால் தாக்கி துன்புறுத்தினார். இதுதொடர்பான செய்தி 'இந்து தமிழ்' நாளிதழில் நேற்று வெளியானது. இதையறிந்த ஆட்சியர் மா.பிரதீப்குமார், சம்பந்தப்பட்ட தூய்மைப் பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க மண்ணச்சநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, மண்ணச்சல்லூர் சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் இரா.கிருஷ்ணவேணி, நாயை அடித்துத் துன்புறுத்திய ஆண்கள் சுய உதவிக் குழு உறுப்பினர் சி.சேகரை, சுயஉதவிக் குழுவில் இருந்து நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றினார். இதுதொடர்பான நகல் ஆட்சியருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் கோ.துவாரகநாத்சிங் அளித்த புகாரின் பேரில் கன்டோன்மென்ட் போலீஸார் சேகர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இதற்கிடையே, காயமடைந்த நாய் மீட்கப்பட்டு, மாநகராட்சி சுகாதாரப் பிரிவைச் சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் மூலம் கோணக்கரையில் உள்ள நாய்கள் பராமரிப்பு மையத்தில் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.

x