தூத்துக்குடி: கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் தனியார் சுகாதார கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 20 வயது மாணவி படித்து வருகிறார்.
இவர் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ‘எனக்கும் மற்றொரு மாணவிக்கும் தகராறு ஏற்பட்டது. என்னை அவர் அவதூறாக பேசியதால் நான் அவரை தாக்கிவிட்டு வீட்டுக்கு சென்றேன். மறுநாள் கல்வி நிறுவனத்துக்கு சென்றபோது, கல்வி நிறுவன கண்காணிப்பாளர் கிருஷ்ணப்பிரியாவும், மருத்துவர் சிவக்குமாரும் அவதூறாக பேசி, அந்த மாணவியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தனர்.
மேலும், நிறுவன கண்காணிப்பாளர் கிருஷ்ணப்பிரியா என்னை தாக்கி, கல்விச் சான்றிதழ்களை திரும்ப பெற ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என மன உளைச்சல் ஏற்படுத்தி, இனிமேல் கல்வி நிறுவனத்துக்கு வரக்கூடாது என வெளியேற்றிவிட்டார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 10 நாட்கள் சிகிச்சை பெற்றேன். கல்வி நிறுவன கண்காணிப்பாளர் கிருஷ்ணப்பிரியா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார்.
காவல் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் விசாரணை நடத்தினார். கல்வி நிறுவன கண்காணிப்பாளர் கிருஷ்ணப் பிரியா மீது எஸ்சி, எஸ்டி, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.