கரூர்: கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவையொட்டி கரூர் நகரில் நாளை (புதன்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது நாளை மதியம் 1 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை அமலில் இருக்கும்.
கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா கடந்த 12-ம் தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நாளை (மே 29 ஆம் தேதி) நடைபெறுகிறது. இதையொட்டி கரூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில் கரூர் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள். இதையொட்டி இன்று திருச்சி, உளுந்தூர்பேட்டை, வேலூரில் இருந்து சிறப்பு காவல் படையினர் 125 பேர் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ளனர். திருச்சி சரகத்தில் உள்ள திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த 600 போலீஸாருடன் உள்ளூர் போலீஸார் 300 பேரும் நாளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழாவையொட்டி நாளை ஒரு நாள் கரூர் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. நாளை மதியம் 1 மணி முதல் 30-ம் தேதி அதிகாலை 1 மணி வரை போக்குவரத்து மாற்றம் நடைமுறையில் இருக்கும்.
கரூர் வெங்கமேடு வழியாக வரும் வாகனங்கள் ரத்தினம் சாலை வழியாக ரயில் நிலையம் அருகேயும், வாங்கல், பஞ்சமாதேவி வழியாக வரும் வாகனங்கள் பாலம்மாள்புரம் பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தப்பட வேண்டும். கோயில் அருகே, தொழிற்பேட்டை, சணப்பிரட்டி பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் பசுபதிபாளையம் தண்ணீர் தொட்டி தெற்கு தெருவில் நிறுத்தப்பட வேண்டும்.
காந்திகிராமம் வடக்கு, தெற்கு பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் பசுபதிபாளையம் அருணாசல நகர் 3வது குறுக்குத் தெரு அருகேயும் தாந்தோணிமலை, திருமாநிலையூர் பகுதிகளில் வழியாக வரும் வாகனங்கள் லைட்ஹவுஸ் முனை அருகே மக்கள் பாதை பகுதியிலும் கோவை சாலை வழியாக வரும் வாகனங்கள் திருவள்ளுவர் மைதானத்திலும் நிறுத்தவேணடும்.
திருவள்ளுவர் மைதானத்தில் இருந்து வெளியே செல்லும் வாகனங்கள் கிழக்கு நுழைவாயில் வழியாக தெற்கு சாலையில் செல்லவேண்டும். முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் அனைத்தும் சர்ச் முனை வழியாக கோயில் வடக்கு வீதியாக செல்ல அனுமதிக்கப்படும்.
கரூர் ஜவஹர் கடைவீதியில் எந்த வாகனமும் அனுமதிக்கப்படாது. திருச்சியில் இருந்து கரூர் வரும் பேருந்துகள் திருமாநிலையூர், செல்லாண்டிபாளையம், சுக்காலியூர், திருகாம்புலியூர் வழியாக கரூர் பேருந்து நிலையம் செல்லவேண்டும் என கரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.