சிவகங்கை கோவானூரில் 250 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு: முக்கிய தகவல்கள் வெளியானது!


சிவகங்கை: கோவானூரில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா, செயலாளர் நரசிம்மன், கள ஆய்வாளர் சரவணன் ஆகியோர் ஆய்வு செய்தபோது 250 ஆண்டுகள் தொன்மைவாய்ந்த கல்வெட்டை கண்டறிந்தனர்.

இதுகுறித்து புலவர் கா.காளிராசா கூறியதாவது: முருகன் கோயில் திருப்பணியின்போது, பழமையான மடப்பள்ளி இடிக்கப்பட்டு அங்கிருந்த கற்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இதில் இருந்த ஒரு கல்வெட்டில் சிவகங்கை 2-வது மன்னரான முத்துவடுகநாதர், பிரதானியான தாண்டவராயன் பிள்ளை ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

நான்கரை நீள கல்வெட்டில் 13-ம் நூற்றாண்டு எழுத்தமைதியில் 14 வரிகளில் எழுதப்பட்டுள்ளன. கல்வெட்டு செய்தி மூலம் கோவானூர் முருகன் கோயிலுக்கு மன்னர் முத்துவடுகநாதருக்கு புண்ணியமாக தாண்டவராயன் பிள்ளை 1755-ம் ஆண்டு மடப்பள்ளி கட்டியது தெரிய வந்தது.

கோவானூர் சிவகங்கை தோன்றுவதுக்கு முன்னரே இருந்துள்ளது. இங்குள்ள முருகன் கோயிலில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இங்கிருந்த சிவன் கோயில் ஒன்று புதைந்து, அதன் கல்வெட்டுகள் ஊர் முழுவதும் பரவி காணப்படுகின்றன.

இங்குள்ள குடிநீர் ஊருணி படித்துறை, கண்மாய் கலுங்கு, மடை போன்ற இடங்களிலும் 13-ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

x