திண்டுக்கல் மாநகராட்சி எல்லை விரிவாக்கத்தால் அதிருப்தி: முள்ளிப்பாடி, தோட்டனூத்து மக்கள் எதிர்ப்பு!


திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி எல்லை விரிவாக்கத்தில் சில ஊராட்சிகள் இணைப்பை மறுபரிசீலனை செய்ய கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக நகராட்சியாக இருந்தபோது இருந்த எல்லையே தற்போதும் உள்ளது. மாநகராட்சியாக தரம் உயர்த்தியபோதே 10 ஊராட்சிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தாமதம் காரணமாக மீண்டும் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்கும் பணி தொடங்கியது. 10 ஊராட்சிகளை இணைக்க ஏற்கெனவே கோப்புகள் நகராட்சிகளின் மாநில நிர்வாக ஆணைய அலுவலகத்தில் இருந்தன. 2 ஊராட்சிகள் தவிர்க்கப்பட்டு 8 ஊராட்சிகள் இணைப்பு என மாற்றப்பட்டது.

நகரின் விரிவாக்கத்துக்கு அவசியம் தேவையான நகருக்கு அரை கி.மீ. தூரத்தில் புறவழிச் சாலை அருகேயுள்ள பொன்னிமாந்துரை புதுப்பட்டி, பிள்ளையார்நத்தம் ஆகிய ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைப்பதைத் தவிர்த்ததன் மூலம் நகர விரிவாக்கத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நகர வளர்ச்சிக்கு உதவாத, நகரில் இருந்து 5 கி.மீ.க்கு அப்பால் உள்ள முள்ளிப்பாடி, தோட்டனூத்து ஊராட்சிகளை இணைத்ததன் மூலம் கிராம மக்களுக்கும், மாநகராட்சிக்கும் பலன் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சியுடன் விரிவாக்கப் பகுதிகளான பள்ளபட்டி, குரும்பப்பட்டி, செட்டி நாயக்கன்பட்டி, அடியனூத்து, பாலகிருஷ்ணாபுரம், சீலப்பாடி, பொன்னிமாந்துரை புதுப்பட்டி, பிள்ளையார்நத்தம் ஆகிய ஊராட்சிகள் சேர்க்கப்பட வேண்டியது அவசியம். அப்பகுதி மக்களே இந்த இணைப்பை ஏற்பர்.

ஆனால், சேர்க்க வேண்டிய பொன்னிமாந்துரை புதுப்பட்டி, பிள்ளையார்நத்தம் ஊராட்சிகளைத் தவிர்த்துவிட்டு, தூரத்தில் குக்கிராமங்கள் அதிகமுள்ள, விளைநிலங்களைக்கொண்ட தோட்டனூத்து, முள்ளிப்பாடி ஊராட்சிகளை இணைத்திருப்பது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, நகர விரிவாக்கத்துக்கு ஏதுவாக இருக்கும் பொன்னிமாந்துரை புதுப்பட்டி, பிள்ளையார்நத்தம் ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைத்துவிட்டு, முள்ளிப்பாடி, தோட்டனூத்து ஊராட்சிகளை இணைப்பதைத் தவிர்க்கலாம் என்பது மக்களின் கருத்தாக உள்ளது.

இதுகுறித்து முள்ளிப்பாடி ஊராட்சி முன்னாள் தலைவர் மாதவி கூறுகையில், திண்டுக்கல் நகருக்கு மிக அருகில் உள்ள பிள்ளையார்நத்தம், பொன்னிமாந்துரை ஊராட்சிகளை விட்டுவிட்டு, நகருடன் தொடர்பே இல்லாத முள்ளிப்பாடியை எப்படி சேர்த்தனர் என்று தெரியவில்லை. 100 நாள் வேலை கிடைக்காதநிலை ஏற்படும் என மக்கள் அச்சத்தில் உள்ளனர். மாநகராட்சியுடன் முள்ளிப்பாடி ஊராட்சியை இணைப்பதைத் தவிர்த்தால் மட்டுமே கிராமமக்கள் பாதிப்புக்குள்ளாகாமல் இருப்பர், என்றார்.

இதற்கிடையே முள்ளிப்பாடி, தோட்டனூத்து கிராம மக்கள் தங்கள் ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்புத் தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளித்தனர். மாநகராட்சியுடன் கிராம ஊராட்சிகளை இணைப்பது குறித்து 120 நாட்களுக்குள் மக்களிடம் கருத்துக்கேட்டு, எதிர்ப்பு இருந்தால் மறுபரிசீலனை செய்யலாம், என நேற்று முன்தினம் மதுரையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

திண்டுக்கல் மாநகராட்சியின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, பாரபட்சமின்றி ஊராட்சிகளை இணைக்க ஆட்சியர் செ.சரவணன் பரிந்துரை செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பு கிராம மக்களிடம் உள்ளது.

x