கோவையில் கனிமங்களை கொண்டு செல்லும் வாகனங்களை கண்காணிக்க 'இ-பெர்மிட்' திட்டம்!  


பிரதிநிதித்துவப் படம்.

கோவை: கோவை மாவட்டத்தில் கனிமங்களை ஏற்றி செல்லும் வாகனங்களை கண்காணிக்க 'இ-பெர்மிட்' திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ‘கோவை மாவட்டத்தில், ஆனைமலை, அன்னூர், கோவை வடக்கு. கிணத்துக்கடவு, மதுக்கரை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி மற்றும் சூலூர் ஆகிய வட்டங்களில் கல்குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்டு குவாரி பணிகள் நடைபெற்று வருகின்றன.

குவாரிகளில் இருந்து வெட்டியெடுக்கப்படும் கனிமங்களை வெளியே எடுத்து செல்ல ஏதுவாக குத்தகைதாரர்களுக்கு வழங்கப்படும் இசைவாணைச்சீட்டு இணையதளம் வழியாக வழங்கும் நடைமுறை செப்டம்பர் 2024 முதல் அமலில் உள்ளது. இந்நிலையில் வாகனங்களில் ஏற்றிச்செல்லும் கனிமங்களை கண்காணிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ள அளவிற்கு கூடுதலாக கனிமம் எடுத்துச்செல்வதை தடுக்கவும், வாகனங்களுக்கு வழங்கப்படும் நடைச்சீட்டினை 'இ-பெர்மிட்' இணையதள வாயிலாக வழங்குவதற்கு அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் முதற்கட்ட நடவடிக்கையாக கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு வட்டங்களில் அமைந்துள்ள குத்தகைதாரர்களுக்கு 'இ-பெர்மிட்' வழங்கும் நடைமுறை பிப்ரவரி 12-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. படிப்படியாக இம்மாத இறுதிக்குள் இதர வட்டங்களிலும் இணையதளம் வாயிலாக 'இ-பெர்மிட்' வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே குத்தகைதாரர்கள் மார்ச் 1-ம் தேதி முதல் இணையத்தில் விண்ணப்பம் செய்து எளிதாகவும், விரைவாகவும் நடைச்சீட்டு பெற அறிவுறுத்தப்படுகிறது. கோவை மாவட்டத்தில், சட்ட விரோதமாக கனிமம் வெட்டியெடுப்பது, கனிமம் கொண்டு செல்வது கண்டறிப்பட்டால் 1800 2333 995 என்ற கட்டணமில்லா அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல்களை தெரிவிக்கலாம்.

குத்தகைதாரர்கள் குத்தகை உரிமம் வழங்கப்பட்ட பகுதியில் விதிகளுக்குட்பட்டு குவாரிப் பணி மேற்கொள்ளவும், வாகன ஓட்டுநர்கள் குவாரியிலிருந்து கனிமங்கள் ஏற்றிச்செல்லும் போது உரிய அனுமதி சீட்டும், கிரஷரிலிருந்து எம்-சாண்ட், ஜல்லி, சிப்ஸ் போன்ற கனிமங்கள் ஏற்றிச் செல்லும் போது உரிய போக்குவரத்து நடைசீட்டும் பெற்று கனிமம் கொண்டு செல்ல வேண்டும். வாகன தணிக்கையின் போது வைத்திருக்க வேண்டும். மேற்கண்டவாறு உரிய அனுமதியில்லாமல் குவாரிப் பணி மேற்கொள்வது, கனிமங்கள் எடுத்துச் செல்வது கண்டறிப்பட்டால் அரசு விதிகளின்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது’ இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x