பாஜக அரசு தனது பாசிச முகத்தை மீண்டும் வெளிக் காட்டியிருக்கிறது: விகடன் இணையதள முடக்கத்துக்கு சீமான் கண்டனம்


சென்னை: பிரதமர் நரேந்திரமோடி குறித்து கருத்துப்படம் வெளியிட்டதற்காக விகடன் இணையதளத்தை முடக்கியிருப்பது ஜனநாயகப் படுகொலை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமர் மோடி குறித்து கருத்துப்படம் வெளியிட்டதற்காக விகடன் நிறுவனத்தின் இணையதளத்தை மத்திய அரசின் சட்ட அமலாக்கத் துறை முடக்கியிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்திய நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் கை, கால்களில் விலங்கிடப்பட்டு, அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டதைக் கண்டிக்காத மத்திய அரசின் செயல்பாடு குறித்த கருத்துப்படம் வெளியிட்டதற்காக விகடனின் இணைய தளத்தையே முடக்கி வைத்திருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.

கருத்துப் படங்களை வெளியிட்டு அரசுகளின் குற்றம், குறைகளை எடுத்துரைப்பதும், பிழைகளைச் சுட்டிக்காட்டி திருத்தக் கோருவதும், அநீதிகளை எதிர்ப்பதும் தான் ஊடகங்களின் தலையாயக் கடமை; முதன்மைப் பணி! அந்த அடிப்படையில், இந்திய நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் கை, கால்களில் விலங்கிடப்பட்டு, அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டது ஒட்டு மொத்த நாட்டுக்கே பெருத்த அவமானம்; தலை குனிவு என்பதைத்தான் அந்தக் கருத்துப்படம் எடுத்துரைக்கிறது.

அமெரிக்க அரசின் ஆணவப் போக்கைத் தட்டிக் கேட்க வக்கற்ற மத்திய அரசின் கையாலாகாத்தனத்தையே விகடன் கருத்துப் படமாக வெளியிட்டிருக்கிறது. அது பிழையோ, குற்றமோ, சட்டவிரோதமோ இல்லை. அது விகடன் நிறுவனத்தின் கருத்துரிமை; விமர்சனப்பார்வை! அதனை செய்தற்காகவே விகடனின் இணையதளத்தை முடக்கியது சனநாயகப்படுகொலை! பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை எல்லாம் இருந்தால்தான் அந்நாடு சுதந்திர நாடு! அத்தகைய அடிப்படை உரிமைகளே இங்கு பறிக்கப்படுமென்றால், இது விடுதலைபெற்ற நாடா ? இல்லை! அடிமை நாடா ? எனும் கேள்வி எழுகிறது.

மத்தியில் ஆளும் பாஜக அரசின் இந்நடவடிக்கை இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளான கருத்துரிமை, எழுத்துரிமை ஆகியவற்றிற்கு எதிரான கொடும் அச்சுறுத்தல். இதனை வன்மையாக எதிர்க்கிறேன். ஒரு கருத்துப்படம் வெளியிட்டதற்காக நூற்றாண்டுப் புகழ்பெற்ற விகடன் நிறுவனத்தின் இணையப் பக்கத்தையே மொத்தமாக முடக்குவார்களென்றால், இங்கு அவசர நிலை நிலவுகிறதா ? இல்லை! மக்களாட்சி நீடிக்கிறதா ? எதேச்சதிகாரப்போக்கின் உச்சம்! இது சனநாயகத்தின் நான்காம் தூணாக இருக்கக்கூடிய ஊடகங்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் நேரடி அச்சுறுத்தல்!

இந்தியக் குடிமக்களின் கை, கால்களில் விலங்கிட்ட அமெரிக்க அரசின் செயல்பாட்டைக் கண்டிக்காத பாஜக அரசின் செயல்பாடு தேசப்பக்தி! அதனை எதிர்த்துக் குரலெழுப்பிய விகடன் நிறுவனத்தின் செயல்பாடு தேச விரோதமா ? வெட்கக்கேடு! விகடனின் இணையப் பக்கத்தை முடக்கியதன் மூலம் மத்தியில் ஆளும் பாஜக அரசு தனது பாசிச முகத்தை மீண்டும் ஒரு முறை வெளிக்காட்டியிருக்கிறது.

இச்சமயத்தில், கருத்துரிமைக்கு எதிராகக் குரல்வளை நெரிக்கப்பட்டுள்ள விகடன் நிறுவனத்திற்கு தார்மீக ஆதரவாக நாம் தமிழர் கட்சி துணைநிற்குமென உறுதியளிக்கிறேன். இத்தோடு, முடக்கப்பட்டுள்ள விகடன் இணையதளத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக மத்தியில் ஆளும் பாஜக அரசை வலியுறுத்துகிறேன்” என்று சீமான் தெரிவித்துள்ளார்.

x