தஞ்சாவூர்: கரந்தை அருகே கோடியம்மன் கோயில், சுங்கான்திடல் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலையும், நாகை சாலை ஞானம் நகரில் அன்றிரவும் சாலையில் காட்டெருமை திரிவைக் கண்ட அப்பகுதி மக்கள், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
தகவலறிந்த வனத் துறையினர் ஞானம் நகர், காட்டுத்தோட்டம், மாரியம்மன் கோயில், தளவாய்ப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன் மூலம் காட்டெருமையைத் தேடினர். ஆனால், காட்டெருமை ட்ரோன் பார்வையில் சிக்கவில்லை. இதைத்தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் எம். அனந்த குமார் தலைமையில் 20 பேர் அடங்கிய 4 குழுக்கள் அமைக்கப்பட்டு காட்டெருமையைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து வனத் துறையினர் கூறுகையில், ”மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து காவிரி அல்லது கொள்ளிடம் ஆற்றுப் படுகை வழியாக காட்டெருமை வந்திருக்கலாம். காட்டெருமையைப் பிடிக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளோம்” என்றனர்.
இதேபோல, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பூதலூர் அருகே வளம்பக்குடி கிராமத்துக்குள் புகுந்த காட்டெருமையை வனத் துறையினரால் பிடித்துச் சென்றனர்.