சிதம்பரம் நடராஜர் கோயிலில் நந்தன் நுழைந்த வாயில் திறக்கப்பட வேண்டும்: கி.வீரமணி கோரிக்கை


சிதம்பரம்: திராவிடர் கழக மாநில பொதுக்குழு கூட்டம் சிதம்பரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டார். இக்கூட்டத்தில், சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து அறநிலைய சட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு கொண்டுவர அரசுக்கு வலியுறுத்துவது உட்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத்தொடர்ந்து கி.வீரமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மருத்துவக் கல்வியில் இருப்பிடம் சார்ந்த இடஒதுக்கீடு கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு மாநில உரிமையை பறிக்கும் செயல். இது தவறு என தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து குரல் கொடுத்திருக்கிறார்கள். இது மாநில உரிமையை பாதிக்கும் செயல் என்பதால் இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் யுஜிசியின் வரைவு விதிகளை திரும்ப பெற வேண்டும்.

சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து அறநிலையத்துறை சட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு கொண்டுவர வேண்டும். இந்த கோயிலில் தீண்டாமை ஒழிப்பு சட்டம், குழந்தை திருமண சட்டம் போன்றவற்றுக்கு எதிரான நிலைப்பாடு இருக்கிறது. பழனி முருகன் கோயிலின் அர்ச்சகர்களாக மீண்டும் பண்டாரத்தார்களை நியமனம் செய்ய வேண்டும். திமுக ஆட்சியில்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வர வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டது. இது மிகப்பெரிய புரட்சி. பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுத்தது இன்றைய ஸ்டாலின் அரசுதான். சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீண்டாமை ஒழிப்பு சட்டத்திற்கு எதிராக நந்தன் நுழைந்தது என்று ஒரு வாயிலை மூடி வைத்திருக்கிறார்கள். அது திறக்கப்பட வேண்டும்.

மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மறுக்கிறது. தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது. அதிக வரி இங்கிருந்து வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்திற்கு அதிக நிதி கொடுக்காமல் பிஹார், ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதியை வாரி வழங்குகிறது. மாநில உரிமைகளை, அதிகாரங்களை பறிக்கக் கூடாது. இதற்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும். தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டை கொண்டுவர வேண்டும் என்பதற்காக அகில இந்திய அளவில் ஒருமித்த கட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு மாநாட்டை நடத்த இருக்கிறோம்.

நடிகர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது குறித்த கேட்கிறீர்கள், தமிழ்நாட்டில் பாஜகவினர் கட்சிக்கு ஆள் பிடிக்கிறார்கள். தமிழகத்தில் காலூன்ற முடியுமா என பார்க்கிறார்கள். மற்ற மாநிலங்களைப்போல் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சிக்கு வர முடியாது. முட்டி முட்டி பார்த்து மண்டை உடைபட்டு விட்டார்கள். அவர்களிடம் என்ன செய்யப் போகிறோம் என்ற திட்டம் இல்லை. அதனால்தான் இடிக்க பார்க்கிறார்கள். அவர்களுக்கு இடித்தே பழக்கம். வட மாநிலத்தில் அப்படித்தான் செய்தார்கள். அந்த பாட்சா இங்கே பலிக்காது என்றார்.

x