ஆனைமலை வனப்பகுதிக்குள் சாலை அமைக்க எதிர்ப்பு: மாவட்ட வன அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா


கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குள் பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவிக்க வந்த விவசாயிகள், மாவட்ட வன அலுவலகத்தில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திலுள்ள மலைவாழ் கிராமங்களுக்கு பாதை அமைக்க வேண்டுமென வலியுறுத்தி, மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, திருமூர்த்தி மலையில் இருந்து குருமலை வரை பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பின், வனத்துறை எதிர்ப்பால் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனிடையே, உடுமலையிலுள்ள மாவட்ட வன அலுவலகத்தில் கடந்த 14-ம் தேதி காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து, பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் தளி, திருமூர்த்தி மலை பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் சிலர், மாவட்ட வன அலுவலகத்தில் நேற்று திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, தளி விவசாயிகள் சங்க நிர்வாகி சுரேஷ்குமார் கூறும்போது, "தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில், வன விலங்குகள் எல்லையை தாண்டி 40 கிமீ சுற்றளவுக்கு விவசாய நிலங்களில் ஊடுருவி வருவதாக, வனத்துறை அளித்துள்ள தகவல் மூலமாக தெரிய வருகிறது. இந்நிலையில், புலிகள் சரணாலயமாக உள்ள வனப்பகுதிக்குள் சாலை வசதி ஏற்படுத்தினால், வன விலங்குகள் எளிதாக ஊருக்குள் ஊடுருவ வாய்ப்புள்ளது. இதனால், விலங்கு - மனித மோதல் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. சாலை வசதிக்காக ஏற்கெனவே ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. இது தொடர்ந்தால், விவசாயிகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தும் சூழல் உருவாகும்" என்றனர்.

x