தேசிய கல்வி கொள்கையை ஏற்கும்வரை தமிழகத்துக்கு எஸ்எஸ்ஏ திட்ட நிதி ஒதுக்க முடியாது: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்


சென்னை: தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை விதிகளின்படி தமிழகத்துக்கு எஸ்எஸ்ஏ திட்டத்தின் நிதியை ஒதுக்க முடியாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல் தெரிவித்தார்.

தமிழக பள்ளிக்கல்வித் துறையில்கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் நிதியுதவி அளித்து வருகிறது. மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின்கீழ் (எஸ்எஸ்ஏ) இந்த நிதியுதவி தமிழக அரசுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் என்ற பகிர்வு முறையில் நிதி ஒதுக்கப்படுகிறது. அதேநேரம் இந்த நிதியை பெற மத்திய அரசின் விரிவான கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் விதிகளை மாநில அரசுகள் அவசியம் பின்பற்ற வேண்டும்.

இதற்கிடையே தேசிய கல்விக் கொள்கையின் அம்சமான பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்தில் சேராத தமிழகம் உட்பட மாநிலங்களுக்கு எஸ்எஸ்ஏ நிதியை மத்திய அரசு கடந்தாண்டு முதல் நிறுத்திவிட்டது. அந்தவகையில் எஸ்எஸ்ஏ திட்டத்தின் 2023-24-ம் ஆண்டின் 4-ம் தவணை நிதி ரூ.249 கோடியும், 2024-25-ம் ஆண்டின் நிதி ரூ.2,152 கோடியும் மத்திய அரசால் இன்னும் விடுவிக்கப்படாததால் மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும், பள்ளிக்கல்வித் துறையின் முக்கிய திட்டங்களும் தடைப்படும் சூழல்களும் நிலவுகின்றன. மறுபுறம் மத்திய அரசு நிதியை உடனே வழங்க வேண்டும். இல்லையெனில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரeணசியில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்க நிகழ்ச்சியில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் தமிழகத்துக்கு எஸ்எஸ்ஏ நிதி ஒதுக்காதது தொடர்பாக கேட்டபோது அவர் கூறியதாவது: தேசிய கல்விக் கொள்கையை ஏற்க தமிழக அரசு மறுக்கிறது. அதனால் விதிமுறைகளின்படி எங்களால் நிதி ஒதுக்க முடியாது. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் தேசிய கல்வியைக் கொள்கையை ஏற்கும் போது தமிழகம் மட்டும் அதற்கு மறுப்பு தெரிவிப்பது சரியானதல்ல. முதலில் கல்விக் கொள்கையை ஏற்பதாக தமிழக அரசு ஒப்புக்கொண்டு கையொப்பமிட்டது. அதன்பின் அரசியல் காரணங்களுக்காக ஏற்க மறுக்கிறார்கள். இது அவர்களின் தவறு. இதில் தமிழக அரசுதான் அரசியல் செய்கிறது. அவர்களுக்கு தமிழக வளர்ச்சியின் மீது அக்கறை இல்லை.

தேசியக் கல்விக் கொள்கையில் மும்மொழி திட்டம் உள்ளது. அதையேற்று தமிழ், ஆங்கிலத்துடன், கன்னடம் உட்பட ஏதேனும் ஒரு இந்திய மொழியை கற்பதில் என்ன தவறு உள்ளது. உண்மையில் தேசிய கல்விக் கொள்கை உள்ளூர் மொழிக்கே முக்கியத்துவம் தருகிறது. அப்படியெனில் தமிழ் மொழிக்கு எதிராக தமிழக அரசு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கும் வரை விதிகளின்படி தமிழகத்துகு நிதி ஒதுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்

x