சென்னை: தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன் அனுமதியை பெறாமலேயே, ஒப்பந்தப்புள்ளிகளை மின்வாரியம் கோரியிருக்கிறது. ஆட்சியாளர்களின் சுயலாபத்திற்காக அரசும், மின்வாரியமும் எப்படியெல்லாம் விதிகளை வளைக்கின்றன என்பதற்கு இதுவே சான்று என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் கோடைக்கால மின் தேவை கடுமையாக அதிகரிக்கும் என்பதால், அதை சமாளிப்பதற்காக தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன் அனுமதியை பெறாமலேயே, ஒப்பந்தப்புள்ளிகளை மின்வாரியம் கோரியிருக்கிறது. மின்சார வாரியத்தின் இந்த அத்துமீறல் மிகவும் கவலையளிப்பதாக தெரிவித்திருக்கும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம், இனியும் இத்தகைய அத்துமீறல்கள் தொடரக்கூடாது என்றும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஆட்சியாளர்களின் சுயலாபத்திற்காக அரசும், மின்வாரியமும் எப்படியெல்லாம் விதிகளை வளைக்கின்றன என்பதற்கு இதுவே சான்று.
தமிழ்நாட்டில் நடப்பாண்டின் கோடைக்கால மின் தேவை, கடந்த ஆண்டு கோடைக்காலத்தின் அதிகபட்ச மின் தேவையாக 02.05.2024-ஆம் நாளில் பதிவான 20,830 மெகாவாட், 30.04.2024-ஆம் நாளில் பயன்படுத்தப்பட்ட 45.43 கோடி யூனிட் ஆகியவற்றை விட 6% அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மின்வாரியத்திற்கு மரபுசார்ந்த ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 15,707 மெகாவாட் மட்டும் தான். இதை சமாளிக்க 24 மணி நேரமும் கிடைக்கும் வகையில் 2750 மெகாவாட் மின்சாரமும், அதிகபட்ச மின் தேவை உள்ள மாலை நேரங்களில் மட்டும் கிடைக்கும் வகையில் 5775 மெகாவாட் மின்சாரமும் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தபுள்ளிகளை மின்சார வாரியம் கோரியிருக்கிறது.
தமிழ்நாட்டின் மின்சாரத் தேவை உற்பத்தியை விட அதிகமாக இருந்தால் அதை வெளிச்சந்தையிலிருந்து தான் வாங்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அதற்கு முன்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலையும், முன் அனுமதியையும் பெற வேண்டும். மின்சார வாரியம் எந்த விஷயத்திலும் அத்துமீறி செயல்படக்கூடாது என்பதற்காகவும், அதன் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்காகவும் தான் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதை சற்றும் மதிக்காத மின்சார வாரியமும், தமிழ்நாடு அரசும் தங்களின் விருப்பங்களையும், தேவைகளையும் செயல்படுத்தி விட்டு, அதற்குப் பிறகு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியை கட்டாயப்படுத்திப் பெறுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றன. கோடைக்காலத்திற்கு தேவைப்படும் மின்சாரத்தை வாங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரும் விஷயத்திலும் மின்சார வாரியம் அதே அணுகுமுறையைத் தான் பின்பற்றியிருக்கிறது. மின்வாரியத்தின் இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள ஒழுங்குமுறை ஆணையம், இனிவரும் காலங்களில் இத்தகைய போக்கு கூடாது என்றும் எச்சரித்துள்ளது.
ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படுவதற்கு முன்பாக ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலையும், முன் அனுமதியையும் கோரினால், அது பல்வேறு நிபந்தனைகளை விதிக்கும்; தங்களின் விருப்பங்களையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றிக் கொள்ள அது பெரும் தடையாக இருக்கும் என்று அரசும், மின்சார வாரியமும் கருதுகின்றன. அதனால் தான், தங்களின் விருப்பப்படி ஒப்பந்தப்புள்ளிகளை கோரி விட்டு, அதற்குப் பிறகு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலை பெறுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றன. இது சட்டப்பூர்வ அமைப்பான தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை அவமதிக்கும் செயலாகும்.
மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் போது, தங்களின் கைகளில் எதுவும் இல்லை; இது மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முடிவு என்று கூறி, அந்த ஆணையத்தை எல்லையில்லா அதிகாரம் பெற்ற அமைப்பைப் போன்ற தோற்றத்தை அரசும், மின்சார வாரியமும் ஏற்படுத்துகின்றன. ஆனால், மின்சாரக் கொள்முதல் போன்ற தங்களுக்கு சாதகமான விவகாரங்களில் ஒழுங்குமுறை ஆணையத்தை பொம்மை அமைப்பாக மாற்றி தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆட்டுவிக்கின்றனர். இதேபோக்கு தொடர்வதை அனுமதிக்க முடியாது.
தமிழ்நாட்டில் சுமார் 17,000 மெகாவாட் அளவுக்கு அனல் மின் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 5700 மெகாவாட் அளவுக்கான அனல் மின் திட்டங்களுக்கான அடிப்படைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்பட்டால் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலை ஏற்படாது. ஆனால், தங்களின் சுயநலனுக்காக அப்படி ஒரு நிலை உருவாவதை ஆட்சியாளர்கள் விரும்பவில்லை என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இப்போது ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியைக் கூட பெறாமல் அவசரமாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டிருப்பதன் மூலம் இந்தக் குற்றச்சாட்டு உண்மையாகியுள்ளது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன் அனுமதியைப் பெறாமல், மின்சாரம் கொள்முதல் செய்வதற்காக கோரப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளிகளை மின்சார வாரியம் ரத்து செய்ய வேண்டும். மின்சாரம் கொள்முதல் செய்வதற்காக ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரும் திட்டத்தை ஒழுங்குமுறை ஆணையத்திடம் தாக்கல் செய்து, அது விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தான் மின்சாரத்தை கொள்முதல் செய்ய வேண்டும். இனி வரும் காலங்களிலும் இத்தகையப் போக்கு தொடர்வதைத் தடுக்க தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள அனல் மின் திட்டங்களைப் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்