சென்னை: அண்ணா பல்கலைக்கழக உதவி பேராசிரியர், உதவி நூலகர், உடற்கல்வி உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஏப்ரல் 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பாடப்பிரிவுகளில் 232 உதவி பேராசிரியர், உதவி நூலகர், உடற்கல்வி உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் 24-ல் வெளியிட்டு, அதற்கான விண்ணப்பங்களை இணையவழியில் பெற்றது. தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இதற்கான போட்டித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, அண்ணா பல்கலைக்கழக உதவி பேராசிரியர்,, உதவி நூலகர், உடற்கல்வி உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஏப்ரல் 5 மற்றும் 6-ம் தேதி நடைபெறும். தேர்வுக்கான ஹால்டிக்கெட் தேர்வு தொடங்குவதற்கு 7 நாட்களுக்கு முன்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்படும். அதை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். ஹால்டிக்கெட் விண்ணப்பதாரர்களுக்கு தனியாக அனுப்பப்படாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முதல்முறையாக டிஆர்பி: அண்ணா பல்கலைக்கழக உதவி பேராசிரியர், உதவி நூலகர், உடற்கல்வி உதவி இயக்குநர் பணியிடங்கள் இதுவரை பல்கலைக்கழகம் மூலமாகவே நிரப்பப்பட்டு வந்தன., தற்போது முதல்முறையாக அப்பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நிரப்பப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணா பல்கலைக்கழகத்தை தொடர்ந்து சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட இதர பல்கலைக்கழகங்களிலும் உதவி பேராசிரியர், உதவி நூலகர், உடற்கல்வி உதவி இயக்குநர் பணியிடங்களும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாகவே நிரப்பப்படு்ம் என எதிர்பார்க்கப்படுகிறது.