தொகுதி மாறுகிறாரா செல்லூர் ராஜூ? - அமைச்சர் மூர்த்தி ‘கை’க்கு மதுரை மேற்கு தொகுதி சென்றதால் பரபரப்பு


மதுரை: மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி அமைச்சர் மூர்த்தி, மாவட்டச் செயலாளராக உள்ள திமுக வடக்கு மாவட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டதால், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொகுதி மாற உள்ளதாக அதிமுகவில் பரபரப்பாக பேசப்படுகிறது.

மதுரை மாவட்ட அதிமுக முக்கிய அதிகார மையங்களாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், முன்னாள் மேயர் வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் உள்ளனர். மதுரை மாவட்ட அதிமுகவில் இந்த மும்மூர்த்திகளை தாண்டி, கட்சியில் தற்போது யாரும் தலையெடுக்க முடியவில்லை. இவர்கள் ‘கை’காட்டும் நபர்களுக்கே கட்சிப்பதவிகளும், உள்ளாட்சி, சட்டமன்ற, மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் வழங்கப்படுகிறது. அதனால், தற்போது இவர்கள் மாவட்டச் செயலாளர்களாக உள்ள அதிமுக மாவட்டத்தில் ஆங்காங்கே இவர்களுக்கு தெரிந்தும், தெரியாமலும் அதிருப்தி நிர்வாகிகள் தலையெடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலை குறிவைத்து 10 தொகுதிளிலும் ‘சீட்’ பெற மதுரை மாவட்ட அதிமுகவில் இந்த மும்மூர்த்திகள், அவர்கள் ஆதரவு பெற்ற நிர்வாகிகள் மற்றும் அதிருப்தியாளர்களிடையே நேரடியாகவும், மறைமுகமாகவும் போட்டி உருவாகியுள்ளது. ஆனால், இந்த மும்மூர்த்திகளோ, தங்கள் மாவட்டங்களுக்குட்பட்ட தொகுதிகளில் தாங்கள் எங்கே போட்டியிடுவது, தனது ஆதரவாளர்களில் யாரை எந்த தொகுதியில் போட்டியிட வைக்கலாம் என தற்போதே கணக்கு செய்து, அதற்கான தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா பொதுச் செயலாளராக இருந்தவரை, கட்சியில் யார் வேட்பாளராக்கப்படுவார்கள் என்பதும், முக்கிய தலைவர்களாகவே இருந்தாலும் அவர்களுக்கு கூட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் வரை தாம் எந்த தொகுதியில் போட்டியிட போகிறோம் என்பது தெரியாது. அந்தளவுக்கு ‘சஸ்பென்ஸ்’ நிறைந்ததாகவே இருக்கும், அதிமுக வேட்பாளர் பட்டியல் தேர்வு. பட்டியல் வந்தபிறகு கூட, திடீரென்று மாற்றப்படலாம் என்பதால் நிர்வாகிகளை ஒரு வித பதட்டத்திலே ஜெயலலிதா வைத்திருப்பார்.

ஆனால், இன்று பொதுச்செலயாளராக உள்ள கே.பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் அதற்கு நேர்மாறான நிலையே நீடிக்கிறது. அதனால், கட்சித்தலைமை செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா கைகாட்டும் நபர்களுக்கே வழக்கம்போல் சட்டமன்ற தேர்தலில் ‘சீட்’ வழங்க வாய்ப்புள்ளது என நிர்வாகிகள் கூறுகிறார்கள். அதனாலே, தேர்தல் ‘சீட்’ கிடைக்காது என நினைக்கும் நிர்வாகிகள் தற்போது கட்சிப்பணிகளில், தேர்தல் களப்பணிகளில் வேண்டா, வெறுப்பாகவே பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்நிலையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் நியமனம், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்ற தொகுதிகள் பட்டியல், மதுரை மாநகர அதிமுகவில் ஒரு வித பரபரப்பை உருவாக்கி உள்ளது. மதுரை திமுக வடக்கு மாவட்ட செயலாளராக உள்ள அமைச்சர் பி.மூர்த்தி வசம், முன்பு சோழவந்தான், மதுரை கிழக்கு, மேலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளே இடம்பெற்றிருந்தன. தற்போது மாநகரத்தில் இருந்த மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு பி.மூர்த்திக்கு கூடுதலாக அவரது வடக்கு மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.

திமுகவில் பி.மூர்த்தி போட்டியிடுவதற்காகவே மேற்கு தொகுதி அவருக்கு வழங்கப்பட்டதாக ஒரு தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால், அவரது ஆதரவாளர்கள், அவர் வழக்கம்போல கிழக்கு தொகுதியிலே போட்டியிடுவார், கட்சித்தலைமை அவரது பணியை பாராட்டும் வகையில், அதிக தொகுதிகளை வென்று கொடுக்கும் இலக்கை நிர்ணயித்து அவருக்கு கூடுதலாக மதுரை மேற்கு தொகுதி வழங்கியுள்ளதாக தெரிவித்தனர். தற்போது மதுரை மேற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். கடந்த முறையே, தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சின்னம்மாளிடம் 7121 வாக்குள் வித்தியாசத்தில்தான் வெற்றிப்பெற்றுள்ளார்.

பொருளாதார பலம் கொண்ட நல்ல வேட்பாளரை போட்டிருந்தால் செல்லூர் கே.ராஜூக்கு கடந்த தேர்தலிலே சிக்கல் ஏற்பட்டிருக்கும் எனவும், அதனால், அவரே இந்த முறை தொகுதி மாறலமா? என ஆலோசித்து வந்தாகவும் அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்த சூழலில் மதுரை தெற்கு தொகுதிக்கு செல்லூர் ராஜூ மாறக்கூடும் என அதிமுகவில் ஒரு தரப்பினர் பேசி வருகிறார்கள். அமைச்சர் பி.மூர்த்தி மாவட்டச் செயலாளராக உள்ள திமுக வடக்கு மாவட்டத்திற்கு மேற்கு தொகுதி வழங்கப்பட்டுள்ளதால், அவர் பணத்தை தண்ணீராக செலவு செய்த எப்படியும் மேற்கு தொகுதியில் திமுகவை வெற்றிப்பெற வைப்பார் என திமுகவினர் கூறி வருகின்றனர். அவரிடம் முட்டிமோதுவதற்கு பதிலாக செல்லூர் ராஜூ தெற்கு தொகுதிக்கு மாறலாம் எனக்கூறப்படுகிறது.

இதுகுறித்து செல்லூர் ராஜூ ஆதரவாளர்கள் கூறுகையில், ‘‘மதுரை மேற்கு தொகுதியில் செல்லூர் ராஜூ ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். மூன்று முறை இந்த தொகுதியில் தொடர் வெற்றியும் பெற்றுள்ளார்.

தொகுதி மக்களை பெயர் சொல்லி அழைக்கும் வகையில் அவர்களிடம் நெருக்கமாக உள்ளார். அதிமுகவும், தானும் செல்வாக்காக உள்ள இந்த தொகுதியில் பி.மூர்த்தியே வந்து போட்டியிட்டாலும் அவர் மாறவேமாட்டார், ’’ என்றனர்.

x