மாநில பிசியோதெரபி கவுன்சில் நிறுவப்படுமா? - திமுக வாக்குறுதியை நிறைவேற்ற எதிர்பார்ப்பு


மதுரை: மாநில பிசியோதெரபி கவுன்சில் நிறுவப்படும், தாலுகா மருத்துவமனைகளில் புதிய பிசியோதெரபி துறை உருவாக்கப்படும் என தனது தேர்தல் அறிக்கையில் கூறியபடி திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பிசியோதெரபிஸ்ட்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இதுகுறித்து இந்தியன் அசோசியேசன் ஆப் பிசியோதெரபிஸ்ட்கள் சங்க தமிழ்நாடு கிளைத் தலைவர் வெ.கிருஷ்ணகுமார் கூறியதாவது: திமுக தனது தேர்தல் அறிக்கையில் பிசியோதெரபி துறையின் மேம்பாட்டிற்கு முக்கியமான சில வாக்குறுதிகளை அளித்திருந்தது. ஆனால், ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை அந்த வாக்குறுதிகள் செயல்படுத்தப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது.

திமுகவின் தேர்தல் அறிக்கையில், தாலுகா அரசு மருத்துவமனைகளில் புதிய பிசியோதெரபி துறைகள் உருவாக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த 40 ஆண்டுகளாக தமிழக அரசு மருத்துவமனைகளில் வெறும் 247 பிசியோதெரபிஸ்ட்கள் மட்டுமே ரெகுலர் பணியிடங்களில் பணியாற்றி வருகின்றனர். இது, ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நோயாளிகள் எண்ணிக்கைக்கேற்ப மிகவும் குறைவானது. ஆகவே, புதிய பணியிடங்களை உருவாக்கி, அனைத்து தாலுகா மருத்துவமனைகளிலும் பிசியோதெரபி சேவைகளை கொண்டு வர வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம்.

பிசியோதெரபி துறையே இல்லாத தாலுகா மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிசியோதெரபிஸ்ட்கள் நியமிக்க வேண்டும் என்பதும் எங்களுடைய முக்கியமான கோரிக்கையாகும். இதற்காக, பல்வேறு கட்டங்களில் மக்கள் மன்றத்தில், போராட்டங்கள் மூலமாகவும் எங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்து வந்துள்ளோம்.

திமுக தேர்தல் அறிக்கையில் பிசியோதெரபி துறை உருவாக்கம் பற்றிய அறிவிப்பு, தமிழக பிசியோதெரபிஸ்ட்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால், நான்கு ஆண்டுகள் முடிவடையும் தருவாயில், எம்ஆர்பி மருத்துவ தேர்வு வாரியத்தின் மூலம் வெறும் 47 பணியிடங்களுக்காக மட்டும் தேர்வு அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 2ஆம் தேதி நடைபெற்ற தேர்வை சுமார் 10,000 பிசியோதெரபிஸ்ட்கள் எழுதியுள்ளனர். இதன் மிகுந்த வியப்பான மற்றும் ஏமாற்றத்திற்குரிய செய்தி என்னவெனில், இந்த 47 பணியிடங்களும் புதியவை அல்ல, மாறாக, பணி ஓய்வு காலி பணியிடங்களே.

இந்நிலையில், தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட உறுதிமொழி என்னவாயிற்று? என தமிழகத்தின் பிசியோதெரபிஸ்ட்கள், அவர்கள் குடும்ப உறுப்பினர்கள், மாணவர்கள் என அனைவரும் மாண்புமிகு தமிழக முதல்வருக்கு கடிதங்கள் அனுப்பும் போராட்டத்தை பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் தொடங்கி உள்ளோம்.

திமுக தேர்தல் அறிக்கையின் 346-வது குறிப்பில், மாநில பிசியோதெரபி கவுன்சில் நிறுவப்படும், தாலுகா மருத்துவமனைகளில் புதிய பிசியோதெரபி துறை உருவாக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இரண்டும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

x