தவெக தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு ஏன்? - கொமதேக ஈஸ்வரன் கேள்வி


ஈரோடு: தவெக தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கியிருப்பது ஏன் என்பது தெரியவில்லை என கொ.ம.தே.க பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

ஈரோடு வீரப்பம்பாளையம் கொ.ம.தே.க அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் தெரு நாய்கள் ஆடுகளை கடிப்பது தினசரி நிகழ்வாக மாறியுள்ளது. இதுவரை 500 அதிகமான ஆடுகளை தெருநாய்கள் கடித்து உள்ளது. தெரு நாய்களுக்கு எதிராக புரட்சி ஏற்படுவதற்கு முன் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி மூலம் முதல்வருக்கு ஒரு ஊக்கத்தை மக்கள் அளித்து இருக்கிறார்கள். இது தமிழகத்துக்கு நல்ல திட்டத்தை செயல்படுத்தும் என நினைக்கிறேன்.

தமிழகத்தில் குற்றம் நடைபெறும் போது அரசு தாமதம் செய்வதை பெரும்பாலும் பார்க்கவில்லை. ஆனால் குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதனால் நடவடிக்கைகள் தீவிரப்படுத்த வேண்டும். நாம் தமிழர் கட்சி வித்தியாசமான கொள்கையோடு பயணம் செய்கிறார்கள். அந்த கட்சியில் உள்ள யாரும் மக்கள் பிரதிநிதிகளாக ஆகக் கூடாது என்று கவனத்தோடு இருப்பதாக நான் பார்க்கிறேன்.

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு ஏன் என்று யாருக்கும் புரியவில்லை. விஜய்க்கும் புரியவில்லை. காரணமும் தெரியவில்லை. தேர்தல் நெருங்க நெருங்க தான் காரணம் முழுமையாக தெரியவரும் என்று கூறினார்.

x