சென்னை: சங்கரன்கோவிலைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று, அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வாகனம் இல்லாததால், தாயின் உடலை அவரது மகன் சுமார் 15 கி.மீ. தூரம் சைக்கிளில் எடுத்துச் சென்ற அவலம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்றது. தற்போது, தவறான சிகிச்சையால் 4 வயது சிறுவன் உயிரிழந்திருப்பது அம்மருத்துவமனையின் அலட்சியப்போக்கு தொடர்வதையே வெளிக்காட்டுகிறது.
சிறுவன் உயிரிழப்பு தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள், செவிலியர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழக அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை, போதிய மருத்துவர்கள் இல்லாததால் ஏற்பட்டுள்ளன. நான்கு ஆண்டுகளாக மருத்துவர்களை நியமிக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர்? முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் தொடர் உயிரிழப்புகள் தெரியுமா தெரியாதா?
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த சிறுவன் குடும்பத்தினருக்கு, திமுக கட்சியிலிருந்து உதவி செய்யப் போவதாகக் கூறியிருப்பது திமுக அரசின் தோல்வியை மூடி மறைக்கவா? தமிழக அரசு ஏன் பொறுப்பேற்கவில்லை? அரசு சார்பில் ஏன் இழப்பீடு அறிவிக்கவில்லை? திமுக அரசின் சுகாதாரத்துறை ஒழுங்காகச் செயல்படுவதற்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பறிகொடுக்க வேண்டும்?