புதுக்கோட்டை: அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு பாஜகவே காரணம் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தமிழகத்தில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு பாஜகவே காரணம். ஏனெனில், தமிழகத்தில் அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன.
திராவிட அரசியலில் தங்களுக்கு இடமில்லை எனக் கருதி, அதிமுகவின் பலத்தை அழிக்க வேண்டும், பல பிரிவுகளாக ஆக்க வேண்டும் என டெல்லியில் இருந்து பல ரூபங்களில் பாஜக இயக்கி வருகிறது.
அதிமுகவினர் நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருப்பதை விட, மக்கள் மன்றத்தை அணுகுவது முக்கியமானது. அதே நேரத்தில், தங்களுடைய எதிரி யார், பங்காளி யார் என்று புரிந்துகொள்ள வேண்டும். பங்காளியை எதிரியாகவும், எதிரியை பங்காளியாகவும் கருதினால் அந்த அரசியல் விபரீதமாகத்தான் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.