அரியலூர்: உயிரிழந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் உடல், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் கிராமம் சன்னதி தெருவை சேர்ந்தவர் பிச்சைமுத்து மகன் ராமசாமி (98). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர், தனது உயிரிழப்புக்கு பிறகு தனது உடலை தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவம் பயில தானமாக வழங்குவதாக பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், வயது மூப்பின் காரணமாக நேற்று (பிப்.14) ராமசாமி இயற்கை எய்தினார். இந்நிலையில், இன்று (பிப்.15) காலை மாவட்ட நிர்வாகம் சார்பில் கோட்டாட்சியர் ஷீஜா, வட்டாட்சியர் முத்துலெட்சுமி உள்ளிட்ட வருவாய்த்துறையினர் கீழப்பழுவூரில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து ராமசாமி உடல் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது.