மதுரை: பொதுப் பாதை பிரச்சினை தொடர்பாக பள்ளி மாணவிகளை அழைத்து வந்து மறியலில் ஈடுபடுத்தியது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், குடியிருப்புவாசிகள் மீது வழக்குப் பதிய உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அருகிலுள்ள திண்டியூர் ஊராட்சியில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியிலுள்ள தாதங்குளம் ஆதிதிராவிடர் குடியிருப்புக்குச் செல்லும் பாதையில் தனிநபர் ஒருவர் தடுப்புச் சுவர் எழுப்பியதால், அப்பாதையை மக்களால் பயன்படுத்த முடியவில்லை என புகார் எழுந்துள்ளது.
இதைக் கண்டித்தும், இப்பிரச்சினைக்கு அதிகாரிகள் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியும் காளிகாப்பான் - சிவகங்கை சாலை சந்திப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியி னர் மற்றும் அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட முடிவு செய்தனர். இதன்படி நேற்று காலை 10 மணிக்கு விசிக கிழக்கு மாவட்டச் செயலாளர் அரசு முத்துப்பாண்டி தலைமையில் அக்கட்சியினரும், குடியிருப்புவாசிகளும் காளி காப்பான் சந்திப்பில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.
ஒத்தக் கடை ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம், தெற்கு ஒன்றியச் செயலாளர் மஸ்தான்பட்டி ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், சீருடை அணிந்த பள்ளி மாணவிகளையும் அழைத்து வந்து கையில் கட்சிக் கொடிகளை கொடுத்து மறியலில் பங்கேற்க செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்க ளிடம் போலீஸார், வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தனி நபருக்கு சொந்தமான பட்டா இடத்தில் பாதை அமைக்க முடியாது என்று தெரிவித்த அதிகாரிகள், அப்பகுதியிலுள்ள கால்வாய் ஓடை பகுதியில் புதிய பாதை அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனிடையே மறியல் போராட்டத்தில் பங்கேற்க மாணவிகளை அழைத்து வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பொதுப் பிரச்சினை தொடர்பாக போராட்டம் நடத்த பள்ளி மாணவ, மாணவிகளை அழைத்து வரக் கூடாது. ஆனால், அதை மீறி பள்ளி மாணவிகளை சீருடையுடன் அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபடுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக போராட்டம் நடத்தப்பட்ட இடத்திலேயே நாங்கள் எச்சரித்துள்ளோம். விசிகவினர், குடியிருப்புவாசிகள் மீது வழக்குப் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.