விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கியதில் அரசியல் இல்லை: அண்ணாமலை


கோவை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு மத்திய அரசு சிஆர்பிஎப் பாதுகாப்பு வழங்கியதில் அரசியல் இல்லை என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கோவையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக தூண் கட்டப்படும். மத்திய அரசு எல்லோருக்கும் கல்வி திட்டத்தை செயல்படுத்த கடந்த மூன்றரை ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரூ.1,050 கோடி நிதி வழங்கியுள்ளது. கேட்டால் மழுப்பலான பதில் கிடைத்துள்ளது. இதுகுறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்-க்கு மத்திய அரசு ‘சிஆர்பிஎப்’ பாதுகாப்பு வழங்கியுள்ளது. மத்திய பாதுகாப்பு நிறுவனங்கள் அளித்த தகவலின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் இல்லை. தமிழக அரசு ஏன் அவருக்கு பாதுகாப்பு வழங்கவில்லை.
அறிவாலயம் குறித்து நான் கூறியதற்கு முதல்வர் அறிக்கை கொடுத்துள்ளார்.

என்னை இறக்குமதி செய்யப்பட்ட அரசியல்வாதி என திமுக அமைச்சர்கள் கூறியுள்ளனர். திமுகவில் உள்ள சேகர்பாபு உள்ளிட்ட பலர் அதிமுகவில் இருந்து வந்தவர்கள். கடந்த 2024-ம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு வாக்குகள் 7 சதவீதம் கீழே சென்றுள்ளது. 2026-ம் ஆண்டு 20 சதவீதம் கீழே செல்லும். அவர்கள் எப்படி ஆட்சி அமைப்பார்கள். திமுக அரசை அகற்ற மக்கள் முடிவு செய்து விட்டனர்.

உணர்ச்சிவசப்படுவது எனது பலம். தமிழகத்தில் அதிகாரப்பூர்வமாக இரண்டாவது இடத்திற்கு பாஜக வந்துள்ளது. அரசு மருத்துவமனையில் அலட்சியத்தால் உயிரிழப்புகள் ஏற்படுவது குறித்து வெளிவந்த செய்திகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் என்ன பதில் கூறுவார். அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபருடன் அவர் இருந்த புகைப்படத்திற்கு இதுவரை விளக்கம் கொடுக்கவில்லை.

கோவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செயல்பட மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி என யாரும் உதவுவதில்லை. இதன் காரணமாகவே அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கு கூட மத்திய அரசின் நிதியுதவி பெற்று வர வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. 2026-ல் சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் இணைந்து திமுக அரசை அகற்றுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

x