சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுவரை நடைபெற்று வந்த நீதிபதிகள் பதவியேற்பு விழா, முதல்முறையாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நடத்தப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்ற அமர்வு மதுரையில் அமைக்கப்பட்டு 20 ஆண்டுகள் முடிந்துள்ளன. மதுரை அமர்வுக்கான நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து 3 மாதங்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அவ்வப்போது மதுரை அமர்வுக்கு வந்து, வழக்குகளை விசாரித்து வருகிறார்.
எனினும், புதிய நீதிபதிகள் பதவியேற்பு மற்றும் பணியிலிருந்து ஓய்வுபெறும் நீதிபதிகளுக்கான பிரிவு வழியனுப்பு விழாக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில்தான் நடைபெறும். மதுரை அமர்வில் பணிபுரியும் நீதிபதி ஓய்வுபெற்றாலும், அவருக்கான வழியனுப்பு விழா சென்னையில்தான் நடைபெறும். இந்த விழாக்களில் மதுரை அமர்வு நீதிபதிகள் காணொலி வாயிலாகப் பங்கேற்று வந்தனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை அமர்வில் பணிபுரியும் நீதிபதிகள் பணி ஓய்வுபெற்றால், அவர்களுக்கான வழியனுப்பு விழா மதுரை அமர்வில் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இவ்வாறு நடத்தப்பட்ட விழாக்களில் தலைமை நீதிபதி மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதிகள் காணொலி வாயிலாகப் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பணிபுரிந்து வரும் தற்காலிக நீதிபதிகள் வி.லட்சுமி நாராயணன் மற்றும் நீதிபதி பி.வடமலை ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் தற்போது மதுரை அமர்வில் பணிபுரிந்து வருகின்றனர். தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமும் மதுரை அமர்வில் வழக்குகளை விசாரித்து வருகிறார்.
இதையடுத்து இரு நீதிபதிகள் பதவியேற்பு நிகழ்ச்சி மதுரை அமர்வில் நேற்று நடைபெற்றது. இரு நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவிப்பிரமாணம் செய்து வைத்து, இருவரையும் நிரந்தர நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் பிறப்பித்த ஆணையை வழங்கினார். இந்த நிகழ்வில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் காணொலி வாயிலாகப் பங்கேற்றனர். மதுரை அமர்வு நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்