அதிகாரிகள் அலட்சியத்தால் மதுரை மாநகராட்சிக்கு பின்னடைவு: என்ன செய்யப் போகிறார் கே.என்.நேரு?


மதுரை: முல்லைப்பெரியாறு குடிநீர் திட்டம் தாமதம், முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை இல்லாமல் தோரணவாயிலை இடித்து பொக்லைன் டிரைவர் பலி, 54 ஆண்டுகள் கடந்தும் குடிநீர் இணைப்பு இதுவரை இல்லாதது, வீட்டு வரி முதல் வணிக வளாகம் வரை சொத்து வரி நிர்ணயித்ததில் முறைகேடு போன்ற பல்வேறு சர்ச்சைகளில் மதுரை மாநகராட்சி சிக்கி வரும் நிலையில் இது குறித்து அமைச்சர் கே.என்.நேரு, அதிகாரிகளிடம் கேள்வி எழுப்புவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மதுரை மாநகராட்சி மிகப் பழமையான அரசியல் முக்கியத்துவம் பெற்றது. 18 லட்சம் மக்கள் வசிக்கும் மாநகராட்சியில் தற்போது வரை முழுமையான பாதாளசாக்கடை, குடிநீர் இணைப்புகள், சுகாதாரம், சாலை வசதிகள் கிடையாது. மாநகராட்சியின் குடியிருப்பு சாலைகள் முதல் பெரும்பாலான முக்கிய சாலைகள் வரை பேட்ச் ஒர்க் கூட செய்யப்படாத கற்கால சாலைகள் போல், மேடு பள்ளமாக உள்ளதால் வாகன ஓட்டிகளின் உடல் ஆரோக்கியம் பாதிக்கிறது.

உள்ளூர் அமைச்சர்கள் முதல் மேயர், ஆளும்கட்சி எம்எல்ஏ-க்கள், கவுன்சிலர்கள் வரை உள்கட்சி கோஷ்டிபூசலில் இருப்பதால் எல்லோரும் மாநகராட்சி விவகாரங்களில் தலையிடுகிறார்கள். இதனால், கடைநிலை அலுவலர்கள் முதல் மாநகராட்சி உயர் அதிகாரிகள் வரை யார் வழிகாட்டுதலை பின்பற்றுவது, யார் பேச்சை கேட்பது, யார் அதிகார மையம் எனத்தெரியாமல் குழப்பத்திலேயே நிர்வாகத்தை நடத்துகிறார்கள்.

இந்நிலையில் உள்ளூர் ஆளும்கட்சி, எதிர்கட்சிகள் பின்னணியில் பெரும் வணிக வளாகங்கள், தனியார் பள்ளிகள், திருமண மண்டபங்கள் போன்ற தனியார் முதலாளிகள் முறையாக வரி செலுத்ததாமல் கோடிக்கணக்கல் பாக்கி வைத்துள்ளார்கள். வணிக வளாகங்களுக்கு வணிக வரி, சொத்து வரி விதிக்காமல் வீட்டு வரி விதித்து கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளது. முன்பு ஆணையாளராக இருந்த தினேஷ்குமார், அதனை கண்டுபிடித்து நியாயமான வரி விதிக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

தற்போது அந்த நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. வார்டுகளில் மண்டலத்தலைவர்கள், கவுன்சிலர்கள், அதிகாரிகள் மோதலால், வளர்ச்சிப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மண்டலத்தலைவர், கவுன்சிலர்கள், அவரவர் ஆதரவு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் மாநகராட்சியில் செயல்படுவதால் மேயர் இந்திராணிக்கு நிர்வாக பணிகளில் ஒத்துழைப்பு வழங்குவதில்லை.

மேயர் கட்டுப்பாட்டில் கவுன்சிலர்களும், அதிகாரிகளும் இல்லை. அதனால், நேற்று மாநகராட்சிக்கு நேரடியாகவே வந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மாநகராட்சியில் நிர்வாக சீர்கேடு, ஊழல் நிறைந்துள்ளது, இதை அமைச்சர் கே.என்.நேருவிடம் நான் சொன்னதாக சொல்லுங்கள், என்று ஆணையாளரிடம் அரைமணி நேரம் புகார் பட்டியல் வாசித்து சென்றார்.

மேலும், அவர் அதிமுக ஆட்சியில் மாநகராட்சி பசுமை மாநகராட்சியாக இருந்ததாகவும், தற்போது குப்பை மாநகராட்சியாக இருப்பதாகவும், ஆணையாளருக்கு இங்கு பல சவால்கள் காத்திருப்பதாக மாநகராட்சி செயல்பாடுகளை பல வகைகளில் குற்றம்சாட்டி சென்றார். ஆணையர் சித்ரா புதியவர் என்பதால், அவர் செல்லூர் கே.ராஜூவிடம் விளக்கமும், பதில் கொடுக்க முடியாமல் திணறினார்.

ஆனால், அவருக்கு ஆதரவாக, மாநகராட்சி மீது செல்லூர் ராஜூ வைத்த குற்றச்சாட்டுகளுக்கும் தற்போது வரை மேயர் முதல் உள்ளூர் அமைச்சர்கள் வரை ஒரு விளக்கமும், பதிலடியும் கொடுக்கவில்லை. திமுக கவுன்சிலர்கள், மாநகராட்சி கூட்டங்களில் பேச முடியாத விஷயங்களை, அதிமுக எதிர்கட்சித்தலைவர் சோலைராஜாவிடம் சொல்லி பேச வைத்து மாநகராட்சிக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்.

முல்லைப்பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம், தற்போது வரை நிறைவுபெறவில்லை. ஆணையர் தினேஷ்குமார், வாரந்தோறும் இந்த திட்டத்துக்கான ஆய்வுக்கூட்டத்தை நடத்தி பணிகளை விரைவுப்படுத்தி வந்தார். அவர் சென்றதோடு இப்பணிகளும் மந்தமாக நடக்கிறது. மதுரை மாநகராட்சி உதயமாகி, 54 ஆண்டுகள் கடந்த நிலையிலும் தற்போது வரை மாநகராட்சி மைய அலுவலகத்துக்கு தற்போது வரை குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை.

ஊருக்கே குடிநீர் வழங்கும் மாநகராட்சிக்கு குடிநீர் லாரிகளில் தினமும் வந்து இறங்குவது, நிர்வாகத்துக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. மற்ற மாநகராட்சிகளுடன் ஒப்பிடும்போது, மதுரை மாநகராட்சியில் கட்டமைப்பு வசதி மிகவும் பின்தங்கியிருப்பதால் புதிய தொழில் நிறுவனங்கள் வர தயங்குகிறார்கள். சுற்றுலாவை மட்டுமே பெரும் வர்த்தகமாக நம்பியுள்ள மதுரைக்கு சுற்றுலாப் பயணிகளும் வர தயங்குகின்றனர்.

மாநகராட்சி சாலைகளில் பாதசாரிகள் நடக்க முடியாத அளவுக்கு நடைபாதைகள் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய மாநகராட்சி அதிகாரிகள் வேடிக்கைப் பார்க்கிறார்கள். சில நாட்களுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடு இல்லாமல் அதிகாரிகள் மிக அலட்சியமாக மாட்டுத்தாவணியில் பழமையான தோரணவாயிலை இடித்ததால் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துக்கு ஒரு அதிகாரியை மட்டும் பலிகாடாக்கி பிரச்சனையை முடிக்கப்பார்க்கின்றனர்.

மாநாராட்சியின் நிர்வாக அலட்சியத்துக்கு இது உதாரணமாக உள்ளது. மாநகராட்சி 100 வார்டுகளில் நீடிக்கும் இந்த பிரச்சனைகள், பின்னடைவுகள், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம். அதனால், நடைபெறவுள்ள 11 மாவட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு, அதிகாரிகளிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்புாரா என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

x