மதுரை மாநகராட்சியில் 5 ஆண்டுகளில் 9,943 தெரு நாய்களுக்கு கருத்தடை - உயர் நீதிமன்றத்தில் தகவல்


மதுரை: மதுரை மாநகராட்சி பகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் 9943 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: "மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. தெரு நாய்கள் சாலைகளின் குறுக்கே பாய்வதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். தெரு நாய்கள் கடித்து பலருக்கு ரேபிஸ் நோய் பரவி வருகிறது. தெரு நாய்களை கட்டுப் படுத்தவும், தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மதுரை மாநகராட்சி தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், மதுரையில் தெரு நாய்களின் எண்ணிக்கையை குறைக்க சிறப்புக் குழு உருவாக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2022ல் 2,532 நாய்களுக்கும், 2023ல் 2,798 நாய்களுக்கும், 2024ல் 4,199 நாய்களுக்கும், 2025ல் இதுவரை 414 நாய்களுக்கும் கருத்தடை செய்யப்பட்டுள்ளது.

மதுரையின் நூறு வார்டுகளிலுள்ள தெரு நாய்களுக்கும் வெள்ளக்கல் பகுதியில் உள்ள 2 மையங்களில் கருத்தடை செய்யப் படுகிறது. தெரு நாய்கள் கணக்கெடுப்பு மார்ச் மாதம் தொடங்கப்படும். இப்பணிக்கு கல்லூரி மாணவர்கள் தன்னார்வலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் தன்னார்வலர்கள் இருந்தால் உதவியாக இருக்கும் எனக் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து தலைமை நீதிபதி அமர்வு, வழக்கறிஞர்கள், விலங்குகள் கருத்தடை மையத்தினர், குடியிருப்பு நலச் சங்கத்தினர் தன்னார் வலர்களாக சேர்ந்து தெரு நாய்களுக்கான தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்யும் பணியில் உதவ வேண்டும் எனத் தெரிவித்தது. தொடர்ந்து அரசு தரப்பில், இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் மற்றும் உறுப்பினர்களுடன் இணைந்து கூட்டம் நடத்தி உரிய தீர்வு காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் தலைமை நீதிபதி அமர்வு, தெரு நாய்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படுவதுடன், கருத்தடை மற்றும் தடுப்பூசி மையங்கள், கால்நடை மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவாகரத்தை எளிதாக எடுத்துக் கொண்டு பதில் மனு தாக்கல் செய்யாமல் இருக்கும் கால்நடைத்துறை இயக்குநர், விலங்கு நல வாரியத்துறை செயலரின் நடவடிக்கைக்கு நீதிமன்றம் அதிருப்தி தெரிவிக்கிறது. இந்த உத்தரவை தமிழக தலைமைச் செயலருக்கு அனுப்ப வேண்டும். விசாரணை மார்ச் 7க்கு தள்ளிவைக்கப்படுகிறது என உத்தரவிட்டது.

x