நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.60 லஞ்சம் வசூலிப்பு: விவசாயிகள் திடீர் போராட்டம்


விழுப்புரம்: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைக் கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் நடவு செய்த நெல் அறுவடை தொடங்கியுள்ளது. இதையொட்டி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனிடையே சில இடங்களில் நெல் மூட்டைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார்கள் அளிக்கப்பட்டன. இந்தப் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்த பின்னரும் அதே நிலை தொடர்கிறது.

குறிப்பாக, வானூர் வட்டாரத்தில் உள்ள அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கூடுதல் கட்டணம் கேட்பதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. வானூர் வட்டம் புதுக்குப்பம் கிராமத்தில் இயங்கும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு ரூ.60 கூடுதல் கட்டணம் கேட்டபதாகக் கூறி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, நெல்மூட்டைகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் போாட்டம் நடத்துவதற்காக, அச்சங்கத்தின் மாநில செயலாளர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் டிராக்டர்களில் வந்தனர். வரும் வழியில் போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

தொடர்ந்து அங்கிருந்து மற்ற வாகனங்கள் மூலம் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த விவசாயிகள், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் தாலுகா காவல்நிலைய போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இதுபற்றி ஆட்சியரிடம் முறையாக மனு அளிக்குமாறு கூறினர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வானூர் தாலுகா புதுக்குப்பத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு விவசாயிகள் பிபிடி நெல் ரகத்தை விற்பனைக்கு கொண்டு சென்ற போது, இதில் கலப்பு உள்ளதாகக் கூறி அலைக்கழித்து வருகின்றனர். அதே நேரத்தில், மூட்டைக்கு ரூ.60 தனியாக கொடுத்தால் விலைபோடுவதாகக் கூறி வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுத்து, விவசாயிகளிடம் உரிய முறையில் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

x