ஸ்ரீவில்லிபுத்தூர்: புயலால் ரயில் ரத்தான நிலையில், முன்பதிவு கட்டணத்தை திருப்பி வழங்காதது தொடர்பாக பயணிக்கு ரூ.8 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பைச் சேர்ந்தவர் வைகுண்டமூர்த்தி. இவர் 2023-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சென்னை செல்வதற்காக ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் ரூ.458 செலுத்தி தட்கலில் டிக்கெட் முன்பதிவு செய்தார். இருக்கை உறுதி செய்த நிலையில் புயல் காரணமாக கடைசி நேரத்தில் ரயில் ரத்து செய்யப்பட்டது. ஆனால், கட்டணத்தை திருப்பி வழங்கவில்லை.
இதுகுறித்து வைகுண்டமூர்த்தி, ஶ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். டிக்கெட் கட்டணம் ரூ.458, மன உளைச்சலுக்கு ரூ.5 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.3 ஆயிரத்தை பயணிக்கு ஐ.ஆர்.சி.டி.சி. வழங்க வேண்டும் என நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர் முத்துலட்சுமி ஆகியோர் உத்தரவிட்டனர்.