கொடைக்கானல் மலைப்பூண்டு கிலோ ரூ.400-க்கு விற்பனை: தொடங்கியது அறுவடை


திண்டுக்கல்: கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் புவிசார் குறியீடு பெற்ற மலைப்பூண்டு அறுவடையில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து வரத்து அதிகரிப்பால் விலை குறைந்து ஒரு கிலோ ரூ.400-க்கு விற்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, கவுஞ்சி, பூம்பாறை, கூக்கால், பழம்புத்தூர், கிளாவரை உள்ளிட்ட பகுதிகளில் 900 ஹெக்டேர் பரப்பளவில் மலைப்பூண்டு சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பாரம்பரிய மலைப்பூண்டு அதிக மருத்துவத் தன்மை கொண்டது. அதனால் கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. பயிரிட்ட 120 நாட்களில் மலைப்பூண்டு அறுவடைக்கு வரும். கொடைக்கானல் மலைப் பகுதியில் விளையும் பூண்டு சாம்பல் நிறத்தில் காணப்படும். காரத்தன்மையும் அதிகம். புகை மூட்டம் செய்து பதப்படுத்தி வைத்தால் ஓராண்டு வரை கெடாமல் இருக்கும்.

கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட மலைப்பூண்டுகள் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இதற்கான பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால், வெளி மாநிலங்களில் இருந்து வரத்து அதிகரிப்பால் மலைப்பூண்டு விலை குறைந்து ஒரு கிலோ ரூ.400-க்கு விற்பனையாகிறது. எதிர்பார்த்த விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து மன்னவனூரைச் சேர்ந்த விவசாயி வல்லரசு கூறியதாவது: கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் விளையும் மலைப்பூண்டை, தேனி மாவட்டம் வடுகப்பட்டியில் உள்ள பூண்டு சந்தையில் விற்பனை செய்து வருகிறோம். தற்போது ஒரு கிலோ ரூ.400-க்கு விற்பனையாகிறது. இந்த விலை குறைவால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. ஒரு கிலோ ரூ.600 முதல் ரூ.700 வரை விற்றால் மட்டுமே விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும், என்று கூறினார்.

x