கோவை அதிர்ச்சி: மானாம்பள்ளி வனப்பகுதியில் காயமடைந்த பெண் யானை உயிரிழப்பு


ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட மானாம்பள்ளியில் ஓய்வு விடுதி அருகே உள்ள நீர்நிலையில் காட்டு யானை ஒன்று, உடலின் பெரும்பாலான பாகங்களை நீரில் மூழ்கடித்தவாறு கடந்த 11-ம் தேதி மாலை முதல் நின்று கொண்டிருந்தது.

இது குறித்து தகவலறிந்து வனத் துறையினர் சென்று அங்கிருந்து யானையை விரட்ட முயன்றனர். ஆனால், யானை நகராததால் சந்தேகமடைந்து வனத்துறையினர் அருகில் சென்று பார்த்தபோது, அதன் வயிற்று பகுதியில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வனக் கால்நடை மருத்துவர்கள் மூலமாக சிகிச்சை அளித்தனர். 3 நாட்கள் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று யானை உயிரிழந்தது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, "வயிற்று பகுதியில் ஏற்பட்ட காயத்தால் பெண் யானை அவதிப்பட்டு வந்தது. இதையடுத்து. அதன் உணவு தேவைக்காக ஆற்றங்கரையில் அன்னாசி, முலாம்பழம், வாழை பழங்கள் வைக்கப்பட்டன. காயம் குணமாக மருந்துகள் அளிக்கப்பட்டன. தொடர்ந்து 3 நாட்கள் கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கும்கி யானை சுயம்பு மூலமாக, தண்ணீரில் நின்று கொண்டிருந்த பெண் யானையை கரைக்கு கொண்டுவர நேற்று முயற்சி செய்யப்பட்டது. ஆனால், அந்த யானையின் அருகே கும்கி செல்லவில்லை. பின்னர், மற்றொரு கும்கி மூலமாக முயற்சிக்கப்பட்டும், இருந்த இடத்தைவிட்டு பெண் யானை நகரவில்லை.

இதற்கிடையே, பெண் காட்டு யானை கீழே விழுந்து இறந்தது. வன கால்நடை குழு மருத்துவர் ஏ.சுகுமார், உதவி அறுவை சிகிச்சை நிபுணர் இ.விஜயராகவன் ஆகியோர் அடங்கிய குழுவினர் இன்று (பிப்.14) உடற்கூறாய்வு மேற்கொள்கின்றனர்" என்றனர்.

x