வாராணசியில் காசி தமிழ் சங்கமத்தின் 3-ம் ஆண்டு நிகழ்வு நாளை தொடங்க உள்ள நிலையில், சென்னை சென்ட்ரலில் இருந்து முதல் சிறப்பு ரயிலை ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழகத்துக்கும், காசிக்கும் (வாராணசி, பனாரஸ்) இடையிலான கலாச்சார உறவை வலுப்படுத்தும் வகையில், உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் ‘காசி தமிழ் சங்கமம்’ என்ற நிகழ்வை மத்திய கல்வி அமைச்சகம் கடந்த 2022 மற்றும் 2023-ம் ஆண்டில் நடத்தியது. இந்நிலையில், 3-வது ஆண்டு காசி தமிழ் சங்கமம் நிகழ்வு பிப்ரவரி 15 (நாளை) தொடங்கி, 24-ம் தேதி வரை காசியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சென்னை ஐஐடி ஒருங்கிணைத்து செயல்படுத்துகிறது. இந்த முறை சித்த மருத்துவம், பாரம்பரிய தமிழ் இலக்கியம், தேசத்தின் கலாச்சார ஒற்றுமை ஆகியவற்றுக்கு அகத்திய முனிவர் ஆற்றிய பங்களிப்பை எடுத்துக்காட்டும் விதமாக காசி தமிழ் சங்கமம் நடைபெறுகிறது.
இதையொட்டி, சென்னை சென்ட்ரல் மற்றும் கன்னியாகுமரியில் இருந்து தலா 2 ரயில்கள், கோவையில் இருந்து ஒரு ரயில் என இரு மார்க்கங்களிலும் 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. பல்வேறு துறைகளை சேர்ந்த சுமார் 1,080 பேர் இந்த ரயில்களில் சென்று, காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், சென்னை சென்ட்ரலில் இருந்து 212 பக்தர்களுடன் காசிக்கு புறப்பட்ட முதல் சிறப்பு ரயிலை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவன துணை தலைவர் சுதா சேஷய்யன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, தெற்கு ரயில்வே கூடுதல் மேலாளர் கவுசல் கிஷோர், சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் தமிழக பாஜக துணை தலைவர் கரு. நாகராஜன் கூறியபோது, ‘‘தமிழகத்துக்கும், காசிக்கும் இடையே ஆன்மிகம், கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றை காசி தமிழ் சங்கமம் வலுப்படுத்துகிறது. இத்திட்டத்தை தொடங்கிய பிரதமர் மோடி, 3-வது ஆண்டாக சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்’’ என்றார்.