800 ஆண்டுகள் தொன்மையான பாண்டியர்கால கல்வெட்டுகளை மத்திய தொல்லியல் துறை ஆய்வு


`இந்து தமிழ் திசை' செய்தி எதிரொலியாக மதுரை மாவட்டம் கம்பூர் கிராமத்தில் மலைச்சரிவில் இருந்த 800 ஆண்டுகள் தொன்மையான 3 பாண்டியர்கால கல்வெட்டுகளை மத்திய தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, படியெடுத்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கருங்காலக்குடி அருகேயுள்ள கம்பூர் கிராமத்தின் மேற்குப் புறத்தில் உள்ள வீரக்குறிச்சி மலையில் 800 ஆண்டுகள் தொன்மையான 3 பாண்டியர்கால கல்வெட்டுகள் உள்ளதாக `இந்து தமிழ் திசை' நாளிதழில் செய்தி வெளியானது.

இதுகுறித்து தகவலறிந்த மத்திய தொல்பொருள் துறையினர் நேற்று கம்பூர் கிராமத்துக்குச் சென்று, 3 கல்வெட்டுகளையும் படியெடுத்தனர். ஒரு கல்வெட்டில் முதலாம் மாறவர்ம சுந்தர பாண்டியனின் 7-ம் ஆட்சியாண்டான கி.பி. 1223 -ல் சிவன் கோயிலுக்கு பாஸ்கரன் என்னும் படைத் தலைவன் நிலக்கொடை அளித்துள்ளதையும், திரமம் என்னும் காசு ஒன்றும் கோயிலுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்டுள்ள தகவலும் குறிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு கல்வெட்டில், அதே பாண்டிய மன்னனின் 12-வது ஆட்சி ஆண்டான கி.பி. 1228-ல் கம்பூர் மக்களும், தென்னகங்கத்தேவன் என்னும் இப்பகுதியின் தலைவரும் சேர்ந்து, இங்குள்ள அறைச்சாலை பிள்ளையாருக்கு சிறப்பு பூஜை செய்வதற்காக நிலத்தைத் தானமாக, படைத்தலைவன் பாஸ்கரனுக்கு அளித்திருக்கும் தகவல் இடம்பெற்றுள்ளது. மூன்றாவது கல்வெட்டில் முதலாம் மாறவர்ம சுந்தரபாண்டியன் காலத்தில் கோயிலுக்கு நிலதானம் தரப்பட்டுள்ள குறிப்பு இடம்பெற்றுள்ளது.

சென்னை மத்திய தொல்பொருள் துறையின் தமிழ் கல்வெட்டு பிரிவின் உதவி கல்வெட்டு ஆய்வாளர் ஜெ.வீரமணிகண்டன், மெய்படியாளர்கள் சொ.அழகேசன், அ.காத்தவராயன் ஆகியோர் 5 மணி கல்வெட்டுகளைப் படியெடுத்தனர். சிற்பத் துறை ஆய்வாளர் தேவி, சூழலியல் மற்றும் பண்பாட்டு ஆர்வலர்கள் கம்பூர் செல்வராஜ். பால்குடி கதிரேசன், ராஜா என்ற பிச்சைமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

x