மேட்டூர் அணை 16 கண் மதகு பாலத்தை வலுப்படுத்துவது குறித்து ஐஐடி பேராசிரியர் ஆய்வு


மேட்டூர் அணை 16 கண் மதகு பகுதியில் சென்னை ஐஐடி பேராசிரியர் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து ஆய்வு செய்தார்.

மேட்டூர்: மேட்டூர அணை 16 கண் மதகு பாலத்தை வலுப்படுத்தும் வகையில், சென்னை ஐஐடி பேராசிரியர், நீர்வளத் துறை அதிகாரிகளுடன் இன்று ஆய்வு செய்தார்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை காலங்களில் ஏற்படும் வெள்ள பெருக்கினால் ஏற்படாமல் இருக்கவும், வெள்ள நீரை சேமித்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தவும் மேட்டூர் அணை கட்டப்பட்டது. மேட்டூர் அணை கட்டுவதற்கு 1925-ம் ஆண்டு அடிக்கல் நாட்டிய நிலையில் 1934-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அணைக்கு வரும் வெள்ள நீரை வெளியேற்ற 16 கண் மதகு அமைக்கப்பட்டு, வெள்ள உபரிநீர் போக்கி வழியாக வெளியேற்றவும் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது.

மேட்டூர் அணை கட்டப்பட்டு 90 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், 16 கண் பாலத்தை வலுப்படுத்த நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து 16 கண் பாலத்தை வலுப்படுத்தும் போது, பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட வாய்ப்புள்ளதா? எவ்வாறு வலுப்படுத்துவது குறித்து அறிக்கை அளிக்க சென்னை ஐஐடி பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து சென்னை ஐஐடி கட்டமைப்பு பொறியியல் துறை பேராசிரியர் அழகுசுந்தரமூர்த்தி இன்று 16 கண் பாலம் மற்றும் மதகு ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, 16 கண் மதகு செயல்பாடு, நீர் கசிவு ஏதேனும் உள்ளதா? என விவரங்களை நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, 16 கண் மதகு பாலம் மற்றும் தூண் ஆகியவற்றையில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா? என்பதை துல்லியமாக கண்காணித்தார். பின்னர், நீர்வளத்துறை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆய்வுக்கு பிறகு 16 கண் மதகு, பாலம் ஆகியவற்றின் வலுப்படுத்துவது குறித்து தமிழக அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வின் போது, சேலம் மேல் காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் சிவக்குமார், மேட்டூர் செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், அணை பிரிவு உதவி பொறியாளர் சதிஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

x