சென்னை: பாஜக அரசின் ஆட்சியில் இந்தியாவின் கூட்டாட்சியியல் பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளது என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பான தமிழக ஆளுநரின் அதிகார மீறல்களையும், கண்டனத்துக்கு உரிய முறையில் அவற்றை ஆதரிக்கும் மத்திய பாஜக அரசின் செயலையும் ‘தி இந்து’ ஆங்கில நாளேடு மிகச் சரியாக எடுத்துக் காட்டியுள்ளது. மிகக் கடுமையான சொற்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ள தலையங்கமானது ஆளுநர் தன்னிச்சையாக - சட்டமன்றத்தின் மாண்பைக் குறைத்திடும் வகையில் செயல்படுவதையும், அவர் தன் பதவியில் தொடர்ந்திடும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார் என்பதையும் குறிப்பிட்டுள்ளது.
பெயரளவில் அரசின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆளுநரோ, தொடர்ந்து அவரைப் பாதுகாத்து அவரது நடவடிக்கைகளை ஆதரிக்கும் அவரது டெல்லி எஜமானர்களோ, இந்தியாவின் முன்னணி நாளேடுகளும் அரசியலமைப்புச் சட்ட வல்லுநர்களும் தொடர்ந்து விமர்சித்து வரும்போதிலும், அதில் இருந்து எந்தப் பாடத்தையும் கற்கவில்லை என்பது மோசமானது.
எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் அருவருக்கத்தக்க, அரசியலமைப்புக்குப் புறம்பான நடவடிக்கைகளைக் கண்டித்து அவர்களை நெறிப்படுத்துவதற்குப் பதிலாக, அரசியல் கணக்குகளைத் தீர்த்துக்கொள்ள அத்தகைய நடவடிக்கைகளுக்கு வெகுமதி அளித்து ஊக்குவிக்கும் மத்திய அரசின் செயல் வேதனைக்கு உரியது. பாஜக அரசின் ஆட்சியில் இந்தியாவின் கூட்டாட்சியியல் பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளது” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.