திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக தொழிற்சங்கத்தினர் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக திருவாரூர் மண்டல மேலாளர் புகாரி நடத்திய பேச்சுவார்ததையும் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் நேற்று முன்தினம் மாலை சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அதில், “பணி மறுக்கப்பட்ட கொள்முதல் பணியாளர்களுக்கு பணி வழங்கப்படும். மூவாநல்லூர் சேமிப்பு மையத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட சுமை பணியாளர்களை பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை மாநிலம் தழுவிய பிரச்சினை என்பதால், சென்னை தலைமை அலுவலகத்தின் மூலம் இதற்கு தீர்வு காணப்படும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, ஏஐடியு பொதுச் செயலாளர் சி.சந்திரகுமார், ஐஎன்டியுசி பொதுச் செயலாளர் கா.இளவரி, சிஐடியு அண்ணாதுரை, எல்பிஎஃப் நீல மேகம், அண்ணா தொழிற்சங்கம் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆலோசித்து, கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: தொழிற்சங்கங்கள் விடுத்த கோரிக்கைகளில் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதால், போராட்டம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்படுகிறது.
பிப்.28ம் தேதிக்குள் எஞ்சியுள்ள கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் மார்ச் 1ம் தேதி முதல் போராட்டம் அறிவித்தபடி தொடரும் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று நெல் கொள்முதல் நிலையங்கள் அனைத்தும் வழக்கம்போல செயல்பட்டன.