தஞ்சாவூர்: அய்யம்பேட்டையில் தஞ்சாவூர்- கும்பகோணம் சாலையில் மளிகைக் கடை நடத்தி வருபவர் அபுபக்கர் (53). இவர், 2022-ம் ஆண்டு கடைக்கு பொருட்கள் வாங்க வந்த 13 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். இதுகுறித்து அச்சிறுவன் பெற்றோரிடம் கூறினார். தொடர்ந்து, சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பாபநாசம் அனைத்து மகளிர் போலீஸார் அபுபக்கரை கைது செய்தனர்.
தஞ்சாவூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், அபுபக்கருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம், அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அரசு சார்பில் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சசிரேகா ஆஜரானார்.