தஞ்சை நெகிழ்ச்சி: காவிரியில் மூழ்கிய சிறுவனை காப்பாற்றிய காவலர், தீயணைப்பு வீரருக்கு எஸ்பி பாராட்டு


தஞ்சாவூர்: திருவிடைமருதுார் வட்டம் மேலமுருக்கங்குடியைச் சேர்ந்தவர் முருகானந்தம் மகன் முரளிதரன்(15). இவர், நேற்று முன்தினம் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் நடைபெற்ற தீர்த்தவாரியில் நண்பர்களுடன் பங்கேற்றார்.

அப்போது, காவிரி ஆற்றில் குளித்த முரளிதரன் நீரில் மூழ்கினார். அவர், கரையேற முடியாமல் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்ததை, அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த திருவிடைமருதூர் காவலர் செந்தில், தீயணைப்பு வீரர் ராஜீவ்காந்தி ஆகியோர் கண்டு, ஆற்றுக்குள் குதித்து முரளிதரனை மீட்டு கரை சேர்த்தனர். பின்னர், அவருக்கு முதலுதவி அளித்து திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மீட்புப் பணியின்போது ஆற்றில் கிடந்த கண்ணாடி துண்டு ராஜீவ்காந்தி காலில் கிழிந்தது. இதையடுத்து, திருவிடைமருதூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், துரிதமாக செயல்பட்டு சிறுவனைக் காப்பாற்றிய காவலர் செந்தில், தீயணைப்பு வீரர் ராஜீவ்காந்தி ஆகியோரை தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி. ராஜராம், நேரில் வரவழைத்து பாராட்டுச் சான்றிதழ், வெகுமதி வழங்கி பாராட்டினார்.

x