கோவை மாவட்ட வளர்ச்சி பணிகள் துரிதப்படுத்தப்படும்: புதிதாக பொறுப்பேற்ற ஆட்சியர் பவன்குமார் உறுதி


கோவை: கோவை மாவட்ட ஆட்சியராக பவன்குமார் கிரியப்பனவர் இன்று பொறுப்பேற்றார்.

சமீபத்தில் கோவை மாவட்டம் உள்பட தமிழகத்தில் பணியாற்றிய 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது. கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த கிராந்திகுமார் பாடிக்கு மாற்றாக சென்னை தலைமை செயலாளரின் அலுவலகத்தில் அரசு இணை செயலாளராக (பொதுத்துறை மற்றும் தனி அலுவலர்) பணியாற்றி வந்த பவன்குமார் க.கிரியப்பனவர் நியமிக்கப்பட்டார்.

இன்று காலை ஆட்சியராக பொறுப்பேற்றார். முன்னாள் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பொறுப்புகளை அவரிடம் ஒப்படைத்து வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் கூறியதாவது: ''சிறந்த மாவட்டத்தில் மக்கள் பணியாற்றக்கூடிய முக்கிய பொறுப்பை ஏற்றுள்ளேன். தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்றடைவதை உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வளர்ச்சிப் பணிகள் அனைத்து அரசுதுறைகளுடன் இணைந்து துரிதமாக செயல்படுத்தப்படும். பொதுமக்களின் கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவை மாவட்டம் சிறந்த மாவட்டம். இங்கு செயல்படும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கனிமவள கொள்ளை சம்பவங்களை தடுத்தல், போதை பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழித்தல் போன்ற பணிகள் அனைத்து அரசுதுறைகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படும். அனைவரின் ஒத்துழைப்பு அவசியம்.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

x