கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே அரசுப் பள்ளிக்கு வழித்தட பாதை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை


கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே அரசுப் பள்ளிக்கு வழித்தட பாதை அமைக்கக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் தளி அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னதளி அள்ளி கிராமத்தில் 1965-ம் ஆண்டு அரசு தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் கண்ணன் கொட்டாய், அனுசன் கொட்டாய், தீக்கான் கொட்டாய், மூலக் கொல்லை, தளி அள்ளி கூட்டுரோடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியின் நுழைவாயில் பகுதியில் 500 அடி தூரம் வரை ஒத்தையடி பாதை வசதி மட்டும் உள்ளது.

மேலும், இந்த ஒத்தையடி பாதை தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் உள்ளது. மழைக் காலங்களில் இப்பாதை சேறும், சதியுமாக மாறி விடுவதால், மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, ஒத்தையடி பாதையுள்ள நிலத்தை அரசு கையகப்படுத்தி, சாலை வசதி அமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

x