கிருஷ்ணகிரி: ஓசூர் பகுதியில் உள்ள கிராமங்களில் தடை செய்யப்பட்ட நிறமூட்டப்பட்ட பஞ்சு மிட்டாய் விற்பனை அதிகரித்துள்ளது. இதை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் தடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
கடந்த காலங்களில் கோயில் திருவிழாக்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் திருமண விழாக்கள், பள்ளிகள் முன்பு செயற்கை நிறமூட்டப்பட்ட பஞ்சு மிட்டாய் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. மேலும், அனைத்து ஊர்களிலும் வீதிகளில் கூவி கூவி பஞ்சு மிட்டாய் விற்பனை நடைபெற்று வந்தது. இதை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட்டு வந்தனர்.
இந்நிலையில், செயற்கை நிறமூட்டப்பட்ட பஞ்சு மிட்டாயை ஆய்வு செய்த போது, தொழிற்சாலைகளில் பயன்படுத்தக் கூடிய மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் காரத்தன்மை கொண்ட வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, செயற்கை நிறமூட்டப் பட்ட பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு அரசு தடை விதித்து உத்தரவிட்டது.
இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் பஞ்சு மிட்டாய் விற்பனை தொழிலை அடிப்படையாகக் கொண்ட வட மாநில வியாபாரிகள் செயற்கை நிறமூட்டப்படாத வெள்ளை நிற பஞ்சு மிட்டாயை விற்பனை செய்து வந்தனர். இதற்கு விற்பனையில் வரவேற்பு இல்லை.
இதனால், ஓசூர், கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி உள்ளி்ட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களில் வடமாநில சிறு வியாபாரிகள் தடையை மீறி செயற்கை நிறமூட்டப்பட்ட பஞ்சு மிட்டாயை மீண்டும் விற்பனை செய்து வருகின்றனர். இதில், குறைந்தளவு செயற்கை நிறமூட்டிகள் கலந்திருப்பதாகத் தெரிவித்தாலும், இதை சாப்பிடுவோருக்கு உடல் நலப்பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பொதுமக்கள் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுதொடர்பாக ஓசூர் பகுதி பொதுமக்கள் கூறியதாவது: குழந்தைகளைக் கவரும் வகையில் விற்பனை செய்த கலர் பஞ்சு மிட்டாயில் தீங்கு உள்ளது என தெரியாமல், இது வரையில் கலர் பஞ்சு மிட்டாய் வாங்கி கொடுத்து வந்தோம். தற்போது, தடை விதிக்கப்பட்டதால்,இதுதொடர்பான விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வட மாநிலத்தைச் சேர்ந்த சிறு வியாபாரிகள் கிராமப் பகுதிகளுக்கு நிறமூட்டப்பட்ட பஞ்சு மி்ட்டாய் விற்பனை செய்து வருகின்றனர். கலர் பஞ்சு மிட்டாய்க்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதே எதற்கு விற்பனை செய்கின்றினர் என கேட்டால் இதில் பாதம் பவுடர் கலந்துள்ளோம். இதில் தீங்கு இல்லை என கூறி ஏமாற்றி விற்பனை செய்கின்றனர்.
குறிப்பாக, இவர்கள் நகர் பகுதியில் கலர் பஞ்சு மிட்டாய்களை விற்பனை செய்வதில்லை. கிராமங்களில் மட்டும் விற்பனை செய்கின்றனர். காரணம் கலராக இருந்தால் மட்டும் குழந்தைகள் வாங்கி சாப்பிடுகின்றனர். எனவே, உணவுப் பாதுகாப்பு துறை அலுவலர்கள் கிராமப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு நிறமூட்டப்பட்ட பஞ்சு மிட்டாய் விற்பனையைத் தடுக்கவும், இதுதொடரபான விழிப்புணர்வும் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தகவல் அளிக்க வேண்டுகோள்
ஓசூர் ஒன்றிய உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் முத்து மாரியப்பன் கூறியதாவது: பிங்க் பஞ்சு மிட்டாய் (ரோடன் பி) விற்பனை முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகம் நஞ்சு தன்மையுள்ளது. இதனை விற்பனை செய்தால் நீதிமன்றம் மூலம் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். ஓசூர் பகுதியில் கலர் பஞ்சு மிட்டாய் விற்பனையை கண்டறியப்பட்டுத் தடுக்கப்பட்டுள்ளது.
பாதம் பவுடர் கலந்த பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய முடியாது. எனவே, இது போன்ற பஞ்சுமிட்டாய்களை விற்பனை செய்வது குறித்து பொதுமக்கள் அருகே உள்ள உணவுப் பாதுகாப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தால், நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நிறமுட்டப்பட்ட பஞ்சு மிட்டாய் விற்பனையைக் கண்காணித்துத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.