மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தில் வேர்கடலை பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக கல்லூரி மாணவர் மின்மோட்டார் இயக்கியபோது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். விவசாயி. இவரது மகன் புனிதவேல்(20). தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், புனிதவேல் தந்தையின் விவசாய நிலத்தில் வேர்க்கடலை பயிர்களுக்கு நீர் பாய்ச்சுவதற்காக, இன்று காலை மின் மோட்டாரை இயக்கியதாக தெரிகிறது. அப்போது, எதிர்பாராத விதமாக மின் கசிவு ஏற்பட்டு கல்லூரி மாணவர் மீது மின்சாரம் பாய்ந்ததாகவும். இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த மதுராந்தகம் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.