திருச்சி: திருவெறும்பூர் அருகே கணவரை சுடு தண்ணீர் ஊற்றி கொலை செய்த வழக்கில், மனைவி, மாமியாருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
திருச்சியை அடுத்த திருவெறும்பூரைச் சேர்ந்தவர் ஆர்.செல்வராஜ். இவரது மனைவி டயானாமேரி (23). இருவருக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில், செல்வராஜ் அடிக்கடி மது அருந்தி வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், 2023 மார்ச் மாதம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் வெறுப்படைந்த டயானாமேரி கணவருடன் கோபித்துக் கொண்டு, பாரதிபுரத்தில் உள்ள தனது தாய் இன்னாசியம்மாள் (43) வீட்டுக்குச் சென்றார்.
இதையடுத்து, செல்வராஜ் 5.3.23 அன்று தனது மாமியார் வீட்டிலிருந்த மனைவி டயானாமேரியை தன்னுடன் வரும்படி கூறி, மதுபோதையில் தகராறு செய்துள்ளார். ஆனால், டயானாமேரி, இன்னாசியம்மாள் இருவரும் செல்வராஜை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, செல்வராஜ் வீட்டுக்கு வெளியே படுத்து உறங்கியுள்ளார்.
நள்ளிரவு 2 மணியளவில் வீட்டுக்கு வெளியே செல்வராஜ் படுத்திருந்ததை பார்த்து ஆத்திரமடைந்த டயானாமேரி, இன்னாசியம்மாள் இருவரும், ‘நீ இன்னும் வீட்டுக்கு போகலையா’ என்றுக் கூறி, அண்டாவில் காய்ச்சிய சுடு தண்ணீரை செல்வராஜ் மீது ஊற்றினர். இதனால், அலறித்துடித்த செல்வராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி செல்வராஜ் உயிரிழந்தார்.
இதுகுறித்து திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் சந்திரமோகன், உதவி ஆய்வாளர் பூபதி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, டயானா மேரி, இன்னாசியம்மாள் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வாத, பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், நீதிபதி சுவாமிநாதன் நேற்று தீர்ப்பளித்தார். அதில், டயானாமேரி, இன்னாசியம்மாள் ஆகிய இருவருக்கும் தலா ஆயுள் சிறை தண்டனை, ரூ.1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் சக்திவேல் ஆஜரானார்.