கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் மொட்டை கோபுரத்தில் 5 நிலை ராஜகோபுரம் கட்ட அனுமதி!


கும்பகோணம்: ஆதிகும்பேஸ்வரர் கோயிலின் மொட்டை கோபுரத்தில் 5 நிலை ராஜகோபுரம் கட்ட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலின் தெற்கு நுழைவு வாயிலில் உள்ள மொட்டை கோபுரத்தில் 7 நிலை கொண்ட ராஜகோபுரம் கட்ட முடிவு செய்யப்பட்டு, வரைபடம் தயாரிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தொல்லியியல் வல்லுநர் மதிவாணன், திருச்சி என்ஐடி பேராசிரியர் சுவாமிநாதன் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் மொட்டை கோபுரத்தின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்து, 7 நிலை கோபுரத்துக்குப் பதில் 5 நிலை கொண்ட கோபுரம் கட்ட பரிந்துரை செய்தனர். இதற்கு தற்போது இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். இதையடுத்து, 5 மாதங்களில் பணிகள் தொடங்கி ஓராண்டுக்குள் நிறைவடையும் என அறநிலையத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியது: ஆதிகும்பேஸ்வரர் கோயில் மொட்டை கோபுரத்தில் 5 நிலை கோபுரம் கட்ட ரூ.3 கோடியில் ஒப்பந்தப்புள்ளி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைத்தவுடன், கோயில் நிதி அல்லது உபயதாரர் நிதியுதவியுடன் 5 மாதங்களில் பணிகள் தொடங்கி, ஓராண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2028-ம் ஆண்டு நடைபெறவுள்ள மாசி மகாமகத்துக்குள் ராஜகோபுரம் கட்டும் பணி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றனர்.

x