செமஸ்டர் வினாத்தாள் மாற்றி தந்ததற்கு கண்டனம்: சிபிஐ விசாரணை கோரி புதுச்சேரி திமுக போராட்டம் 


புதுச்சேரி: பல்கலைக் கழக பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தியுள்ளார். செமஸ்டர் தேர்வை சரியான நேரத்தில் நடத்தி முடிவுகளை அறிவிக்காததால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.

புதுச்சேரி மாநில திமுக சார்பில், செமஸ்டர் வினாத்தாள் மாற்றி மாணவர்களை குழப்பிய பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் தவறான நடவடிக்கையைக் கண்டித்து இன்று பாண்டிச்சேரி பல்கலைக்கழக நுழைவு வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் தலைமை வகித்தார்.

இப்போராட்டத்தில் எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்போராட்டத்தில் புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கண்டித்தும் துணைவேந்தரை நியமிக்காத மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் சிவா பேசியதாவது: ''புதுச்சேரியின் பெருமையாக கருதப்பட்ட புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகம் இன்று மிகப் பெரிய நிர்வாக சீர்கேட்டில் சிக்கி இருப்பது அப்பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கான துணைவேந்தரை ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் மத்திய அரசு நியமிக்காமல் இருக்கிறது.

இதனால் பல்கலைக்கழகத்தில் அனைத்து துறைகளிலும் குழப்பம் நிலவுகிறது. பேராசிரியர் குறைதீர்ப்பு அதிகாரி இல்லை. ஆண்டுக்கு ரூ. 600 கோடி நிதியை கையாளக்கூடிய நிதிச் செயலர் இல்லை. நான்கு ஆண்டுகாலமாக பதிவாளர் இல்லை. நிரந்தரமாக இருக்கக் கூடிய ஆராய்ச்சி இயக்குநர் யார் என்று தெரியாத காரணத்தால் ஆராய்ச்சி மாணவர்கள் மத்தியில் சுணக்கம் ஏற்பட்டு இருக்கிறது.

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் உள்ள அரசு, அரசு சார்பு மற்றும் தனியார் கல்லூரிகள் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இங்கு சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பிகாம், பிஏ., பிஎஸ்சி உள்ளிட்ட பல்வேறு கலை, அறிவியல் பட்டப்படிப்புகளை படித்து வருகின்றனர். அவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளுக்கான கால அட்டவணையும், தேர்வும் காலத்தோடு நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

கடந்த 2022-ம்ஆண்டு முதல் செமஸ்டர் தேர்வு சரியான காலத்தில் நடத்தவில்லை. கடந்த கல்வியாண்டில் ஆகஸ்ட் மாதம்தான் தேர்வு முடிவுகள் வெளியானது. இதனால் இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். உரிய நேரத்தில் தேர்வுகளை நடத்தி, ஜூன் மாதத்திற்கள் தேர்வு முடிவுகளை வெளியிட்டால்தான் உயர்படிப்புகளுக்கு மாணவர்கள் செல்ல முடியும்.

முன்பு பல பல்கலைக்கழகங்களில் உயர் படிப்புகளில் சேர ‘ப்ரோவிஷனல் அட்மிஷன்’முறை இருந்தது. அதை எடுத்து விட்டனர். அனைத்து தேர்வு முடிவுகளும் வந்தால்தான் உயர்கல்வியில் சேர முடியும் என்று நிலை இருப்பதால், பிற மாநில பல்கலைக்கழகங்களில் உயர் படிப்புகளில் புதுச்சேரி மாணவ, மாணவிகள் சேர முடியாத நிலை உருவாகி ஓராண்டு காலம் வீணடிக்கப்படுகிறது. அத்துடன் பணிக்கு செல்வதிலும் சிக்கல் ஏறபடுகிறது.

புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தின் தொடர் நிர்வாக சீர்கேட்டால், மத்திய அரசின் தரவரிசைப் பட்டியலில் 8 ஆண்டுகளுக்கு முன்பு 13–வது இடத்தில் இருந்த புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகம் முதல் 100 இடத்திற்கு கூட வர முடியாமல் வெளியில் தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்பொழுது கூட முதலாமாண்டு மாணவர்களுக்கு மொழிப்பாடத்திற்கு வழங்க வேண்டிய வினாத்தாள் மாற்றி இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய வினாத்தாள் வழங்கப்பட்டிருக்கிறது. இது தேர்வுத் துறை அதிகாரிகளின் மெத்தனத்தை, அலட்சியத்தை தோலுரித்து காட்டுகிறது. வினாத்தாள் மாற்றத்திற்கு இன்னும் யாரும் பொறுப்பேற்கவில்லை. பல்கலைக் கழக மாணவர்களின் மதிப்பெண் முறையாக மதிப்பிடுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

பேராசிரியர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட பேராசிரியர்கள் நியமனம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பல்கலைக் கழக உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்திக் கொடுப்பதில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது. அதுகுறித்து விசாரணை நடத்தப்படுவதாக தெரிகிறது. அந்த விசாரணையும் முறையாக நடக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

x