மதுரை தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேக திருப்பணி நன்கொடையில் மோசடி: இந்து மக்கள் கட்சி புகார்


மதுரை: நேதாஜி சாலையிலுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயில் கும்பாபிஷேக திருப்பணிக்கு உபயதாரர்கள் கொடுத்த பணத்தில் பல லட்ச ரூபாய் மோசடி செய்த ஊழியரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்டத் தலைவர் எம்.சோலைகண்ணன் இந்து சமய அறநிலையத் துறை மதுரை மண்டல இணை ஆணையர் க.செல்லத்துரையிடம் நேற்று புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில், மதுரை நேதாஜி ரோடு தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வருகின்றன. உபயதாரர்கள் கொடுத்த பல லட்சம் ரூபாய் நன்கொடைகளை கணக்கில் காட்டாமல் முக்கிய பொறுப்பு வகிக்கும் ஊழியர் ஒருவர் மோசடி செய்துள்ளார். அவர் மீது துறைரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது. எனவே நன்கொடைகளை சுருட்டிய மோசடி ஊழியரிடம் பணத்தை மீட்டு துறைரீதியாக நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்ய வேண்டும்.

வருங்காலங்களில் திருப்பணி மோசடிகளை தடுக்கும் வகையில் நன்கொடை அளிக்கும் உபயதாரர்களின் பெயர்களை கோயில் முன்பாக விளம்பர பலகை வைத்து குறிப்பிட வேண்டும். பணிபுரியும் அர்ச்சகர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதால் பணியிட மாற்றம் செய்ய வேண்டும். மேலும் கோயில் அருகில், கோயில் சொத்தில் அசைவ உணவகம் அமைக்கக் கூடாது எனும் விதிகள் இருக்கும்போது, மதுரை மேலமாசி வீதியில் இம்மையிலும் நன்மை தருவார் கோயில் நுழைவு வாசல் அருகில் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் அசைவ ஹோட்டல் இருப்பதை உடனே அகற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

x