உடுமலை - மூணாறு சாலையில் ஒற்றை யானை நடமாட்டம்: அச்சத்தில் உறைந்த மக்கள்


கோவை: உடுமலையில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் கேரள மாநிலம் மூணாறு அமைந்துள்ளது. இச்சாலை அடர்ந்த வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ளது. இவ்வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.

இதற்கிடையே உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக எந்த நேரமும் வன விலங்குகள் சாலையை கடந்து செல்வதைக் காண முடியும். உடுமலையை அடுத்த ஒன்பதாறு சோதனைச் சாவடியில் இருந்து தமிழக எல்லையான சின்னாறு வரையான இடைப்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றை யானை நடமாட்டம் உள்ளது.

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘‘உடுமலை - மூணாறு சாலையில் ஒற்றை யானை நடமாட்டம் இருப்பதால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமுடன் சாலையை கடக்க வேண்டும். வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தவோ, புகைப்படம் எடுக்கவோ அனுமதி இல்லை. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சோதனைச் சாவடியில் இதுகுறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டே பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப் படுகின்றன. ஒற்றை யானை நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்’’ என்றனர்.

x