அதிமுகவின் வாதத்தை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது: சி.வி.சண்முகம் தகவல்


அதிமுகவின் வாதங்களை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

அதிமுக உட்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிப்பது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதுதொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 29ஏ-ன்படி ஒரு கட்சியை எப்படி பதிவு செய்ய வேண்டும், எப்படி அங்கீகரிக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். கட்சியின் சட்ட விதிகள், இந்திய அரசமைப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா என முடிவெடுத்து சொல்லும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 29ஏ(9) என்ற பிரிவின்படி, அங்கீகரிக்கப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட கட்சியின் பொறுப்பாளர்கள் மாற்றம், கட்சி பெயர் மாற்றம், விதிகளில் மாற்றம், அலுவலக மாற்றம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட வேண்டும். அதை பதிவு செய்வது மட்டும்தான் தேர்தல் ஆணையத்தின் வேலை. அது சரியாக இருக்கிறதா, இல்லையா என ஆய்வு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை. அதில் உள்ள ஆட்சேபனைகளை விசாரிக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டும்தான் உண்டு. பத்தி 15-ன்படி, கட்சியில் பிளவு ஏற்பட்டால், வழங்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் எந்த அணியை அங்கீகரிப்பது என தேர்தல் ஆணையம் முடிவெடுக்க அதிகாரம் உள்ளது.

இந்த வழக்கில், உட்கட்சி விவகாரங்களை விசாரிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளதா என முடிவு செய்ய வேண்டும் என்று வாதிட்டோம். அதனைத் தொடர்ந்து, "உட்கட்சி விவகாரங்களை விசாரிக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் அதிமுக உட்கட்சி விவகாரங்கள் குறித்த மூல வழக்கின் தீர்ப்பு அடிப்படையிலேயே முடிவெடுப்போம்" என்று தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்றத்தின் நேற்றைய தீர்ப்பில், அதிமுக தொடர்பான மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க தடை நீக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அதிமுக உட்கட்சி விவகாரங்களை விசாரிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளதா என்பதை முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதன் மூலம் உயர் நீதிமன்றம் எங்கள் வாதத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், வைகைச்செல்வன், வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் இன்பதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

x