தவளக்குப்பம் அருகே அரசுப் பள்ளியில் குடிநீர்த் தொட்டியின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் காயமடைந்தனர்.
புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பம் அருகேயுள்ள புதுக்குப்பம் மீனவக் கிராமத்தில் 1991-ல் அரசு தொடக்கப் பள்ளி ஒதொடங்கப்பட்டது. பின்னர் அது நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பள்ளியை தொடங்கிய காலத்தில் குடிநீர் மற்றும் மாணவர்கள் கை கழுவதற்காக தொட்டி அமைக்கப்பட்டு, குழாய் இணைக்கப்பட்டது. பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருந்ததால், அதன் சுவர்கள் தண்ணீரில் ஊறி சேதமாகி இருந்தன. இதையடுத்து, தனியார் நிறுவன பங்களிப்புடன் புதிதாக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. எனினும், பழைய குடிநீர் தொட்டி அகற்றப்படவில்லை.
இந்நிலையில், நேற்று மாணவர்கள் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென பழைய குடிநீர் தொட்டியின் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது, அருகில் விளையாடிக் கொண்டிருந்த 4-ம் வகுப்பு மாணவர்கள் பவன்குமார், பவின் மற்றும் 5-ம் வகுப்பு மாணவி தேஷிதா ஆகியோர் காயமடைந்தனர்.
அங்கிருந்த ஆசிரியர்கள், காயமடைந்த மாணவர்களை மீட்டு தவளக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, “இந்தப் பள்ளியில் 35 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. அனைத்து வகுப்பறைகளிலும் மழைக் காலங்களில் தண்ணீர் கசிகிறது. தளத்தின் காரைகள் உடைந்துள்ளன. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசின் அலட்சியபோக்கு காரணமாகவே குடிநீர் தொட்டி சுவர் இடிந்து விழுந்து, மாணவர்கள் காயமடைந்துள்ளனர்” என்றனர்.
இச்சம்பவத்தை அறிந்த சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், கல்வி அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று, காயமடைந்த மாணவர்களிடம் நலம் விசாரித்தனர். மேலும், உயர்தர சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களிடம் கேட்டுக் கொண்டனர்.