வேடசந்தூர்: ஆண்டுதோறும் தை மாதம் பவுர்ணமியன்று ஒரு சிறுமியை நிலாப் பெண்ணாக தேர்வு செய்து, இரவு முழுவதும் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் பாரம்பரியத் திருவிழா, திண்டுக்கல் அருகேயுள்ள கோட்டூர் கிராமத்தில் நேற்று இரவு நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள கோட்டூர் கிராமத்தில் ஒவ்வோர் ஆண்டும் தை பவுர்ணமி நாளன்று இரவில் நிலாப்பெண் வழிபாடு நடை
பெறுவது வழக்கம். தை மாத பவுர்ணமிக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள சிறுமிகளின் பெயர்களை எழுதி, குலுக்கல் முறையில் ஒரு சிறுமி நிலாப்பெண்ணாக தேர்வு செய்யப்படுவார்.
இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட சிறுமிக்கு கிராம மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து பல்வேறு உணவுப் பொருட்களை தயாரித்து வழங்குவர். இந்த ஆண்டு நிலாப் பெண்ணாக கோட்டூர் அருகேயுள்ள தலையூத்துப்பட்டியைச் சேர்ந்த ஆனந்தன் - தமிழ்செல்வி தம்பதியின் மகள் தீக் ஷா(13) தேர்வு செய்யப்பட்டார். இவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
தை மாதம் பவுர்ணமி நாளான நேற்று முன்தினம் இரவு அச்சிறுமிக்கு புத்தாடை அணிவித்து, ஆவாரம்பூ மாலையிட்டு அலங்கரித்து, தலையில் ஆவாரம் பூக்கள் நிரம்பிய கூடையை சுமக்கச் செய்து, ஊருக்கு வெளியே உள்ள மாசடைச்சி அம்மன் கோயிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை அமர வைத்து, இரவு முழுவதும் கும்மியடித்து நிலா பாடல்கள் பாடி, வழிபாடு நடத்தினர்.
விவசாயம் செழிக்கும்... விடிவதற்கு முன் கோயில் வளாகத்தில் பெண்கள் ஒன்று சேர்ந்து பொங்கல் வைத்தனர். தொடர்ந்து அதிகாலையில் சிறுமியை அழைத்துச்சென்று, அருகேயுள்ள நீர்நிலையில் தீபம் ஏற்றச்செய்து வழிபட்டனர். இதுகுறித்து கிராமமக்கள் கூறும்போது, “இந்த வழிபாடு தொன்றுதொட்டு நடந்து வருகிறது. முன்னோர் அறிவுறுத்தியபடி, பெண்கள் மட்டுமே பங்கேற்கும் பாரம்பரிய வழிபாட்டு முறையைத் தொடர்கிறோம். இதனால் விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம்” என்றனர்.