அதிமுக Vs தேர்தல் ஆணையம் வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு: அதிமுக பொதுச் செயலாளர் பதவி, இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தேர்தல் ஆணையம், சின்னம் ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில் விசாரணையை தொடர அனுமதித்த நீதிபதிகள், மனுக்களை விசாரிக்க அதிகாரம் உள்ளதா என்பது குறித்து திருப்தியடைந்த பிறகே தேர்தல் ஆணையம் விசாரணையை துவங்க வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். இது, இபிஎஸ் தரப்புக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
முன்னதாக, தேர்தல் ஆணைய விசாரணைக்கு உயர் நீதிமன்றம் விதித்திருந்த தடையை நீக்க கோரி ஓ.பி.ரவீந்திரநாத், வ.புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன், எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
‘மீண்டும் தர்மமே வெல்லும்’ - ஓபிஎஸ்: “அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க முழுஉரிமை உள்ளது என்று உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தோம். நீதிமன்றத்துக்கு என்னென்ன அதிகாரம் உள்ளதோ அதே அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கும் உள்ளது. இதனடிப்படையில் பழனிசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்கிறோம். தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும். மீண்டும் தர்மமே வெல்லும்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். >>விரிவாக வாசிக்க
“பாடம் புகட்டுவோம்” - புகழேந்தி: “அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையாணை நீக்கப்பட்டுவிட்டது. இனி தடை இல்லை என்ற தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. ஜெயலலிதா புகழை மறைக்க, புதைக்க நினைக்கும் துரோகிகளுக்கு பாடம் புகட்டாமல் விடமாட்டோம்,” என்று அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த புகழேந்தி கூறியுள்ளார். >>விரிவாக வாசிக்க
அதிமுக ரியாக்ஷன் என்ன? - “அதிமுக உட்கட்சி விவகாரத்தை விசாரிக்க தேர்தல் ஆணையத்தின் வேலை இல்லை. அதற்கு அதிகாரமும் இல்லை. அரசியல் கட்சிகளின் உட்கட்சி விவகாரங்களில் தலையிட அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று தேர்தல் ஆணையமும் நீதிமன்றங்களில் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த வழக்கிலும்கூட, தேர்தல் ஆணையம், சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில்தான் நாங்கள் முடிவெடுப்போம் என்று கூறியிருந்தது.
உட்கட்சி விவகாரத்தை விசாரிப்பதற்கு தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இருக்கிறதா, இல்லையா என்பதை முடிவு செய்யுங்கள் என்றுதான் தீர்ப்பு வெளியாகி இருக்கிறது” என்று அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
பிப்.18-ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்: பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்தத் தவறிய திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து அதிமுக மாணவர் அணி சார்பில், பிப்.18ம் தேதி, சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும், என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சீமான் vs விஜய் கட்சி: “நீங்கள் உடலில் கொழுப்பு கேள்விப்பட்டிருப்பீர்கள். பணக்கொழுப்பு கேள்விப்பட்டுள்ளீர்களா? எப்படி ஒருவருக்கு வாய்க்கொழுப்பு அதிகம் என்று கூறுவோமோ, அதுபோல பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால் இதெல்லாம் தேவைப்படும். எனவே, அதைப்பற்றி பேசி காலத்தையும், நேரத்தையும் வீணடிக்க வேண்டாம்” என்று விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்த கேள்விக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.
இதற்கு பதிலடி தந்துள்ள விஜய் கட்சி நிர்வாகிகள், “உழைத்து சம்பாதிப்பதற்கும், திரள் நிதி மூலம் சம்பாதிப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. திரள் நிதியால் கொழுப்பை வளர்த்து கொண்டிருப்பவர்கள் எங்களை விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை” என்று கூறியுள்ளார்.
இந்திய உறவை வலுப்படுத்தும் ட்ரம்ப் நிர்வாகம்: இந்தியா உடனான உறவுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் நிர்வாகம் முன்னுரிமை அளித்து வருவதாக தெரிவித்துள்ள அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் முன்னாள் அதிகாரி லிசா கர்டிஸ், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு ‘செக்’ வைக்க இந்தியாவே சரியான நாடு என ட்ரம்ப் நிர்வாகம் கருதுகிறது என தெரிவித்துள்ளார்.
சாஜன் குமார் குற்றவாளி என தீர்ப்பு: டெல்லியில் கடந்த 1984-ம் ஆண்டு நடைபெற்ற சீக்கிய கலவரத்தின்போது, சரஸ்வதி விஹார் பகுதியில் இரண்டு பேர் கொல்லப்பட்ட வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி சாஜன் குமார் குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மோடியுடன் சுந்தர் பிச்சை சந்திப்பு: பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பிரதமர் நரேந்திர மோடியை கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதுதொடர்பாக சுந்தர் பிச்சை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு மிகவும் மகிழ்ச்சிகரமானது. பாரீஸில் நடைபெற்ற சர்வதேச செயற்கை நுண்ணறிவு செயல் உச்சிமாநாட்டை ஒட்டி நடைபெற்ற இந்த சந்திப்பில், இந்தியாவுக்கு ஏஐ தொழில்நுட்பம் மூலம் கொண்டுவரக் கூடிய வியத்தகு வாய்ப்புகள் மற்றும் கூகுள் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தில் எப்படி நெருக்கமாக இணைந்து பங்களிக்கக்கூடிய வழிகள் குறித்து ஆலோசித்தோம்’ என்று கூறியுள்ளார்.
‘ஐஏஎஸ் அதிகாரிகளை அடிக்கடி மாற்றாதீர்’- ஐஏஎஸ் அதிகாரிகளை அடிக்கடி மாற்றி அரசு நிர்வாகத்தை முடக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் - பும்ரா விலகல்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இறுதி அணியை தேர்வுக்குழுவினர் அறிவித்தனர். இதில் ஜஸ்பிரீத் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். பும்ரா குணமடைந்துவிட்ட போதிலும் போட்டி தொடங்குவதற்குள் அவர், பந்து வீசுவதற்கான உடற்தகுதியை அடைவது சந்தேகம் என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே உத்தேச அணியில் இடம் பெற்றிருந்த அவர், தற்போது நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டு சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார். மாற்று வீரர்கள் பட்டியலில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ், ஷிவம் துபே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடத்தப்படுகிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 20-ம் தேதி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
ஒயிட் வாஷ்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை 142 ரன்களில் வீழ்த்தியது இந்தியா. இதன் மூலம் தொடரை 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து இந்தியா வென்றுள்ளது.