விசிகவின் தூத்துக்குடி பெண் மாவட்ட செயலாளர் மீது காவல்துறை தாக்குதல்: சீமான் கடும் கண்டனம்


சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் தங்கை டிலைட்டா ரவி அவர்களை பெண் என்றும் பாராமல் திமுக அரசின் காவல்துறை கண்மூடித்தனமாக கடுமையாகத் தாக்கியுள்ளது வன்மையான கண்டனத்துக்கு உரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கள்ளச்சாரயம் விற்பவர்களை, கஞ்சா கடத்துபவர்களை, பள்ளிக் குழந்தைகள் என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமை செய்பவர்களை, வழிப்பறி, கொலை, கொள்ளை உள்ளிட்ட கொடுங்குற்றச் செயலில் ஈடுபடுபவர்களைத் தடுக்க திறனற்ற தமிழக அரசின் காவல்துறை அப்பாவி பொது மக்களைத் தாக்குவது என்பது அப்பட்டமான எதேச்சதிகாரப்போக்காகும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சமூக விரோதிகளின் அட்டூழியம் அதிகமாகி பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எவ்வித பாதுகாப்பும் இல்லாத பேராபத்தான சூழல் நிலவுகிறது.

சீரழிந்துள்ள சட்டம் - ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வந்து, பெண்கள் குழந்தைகளைப் பாதுகாக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தமிழ்நாடு காவல்துறை, தன் பங்கிற்கு ரடிகளை போல பெண்களைத் தாக்குவது என்பது வெட்ககேடானதாகும்.
கூட்டணி கட்சியின் பெண் மாவட்டச் செயலாளருக்கு நேர்ந்துள்ள இக்கொடுமைக்கு காவல்துறையை தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் கூறப் போகிறார் ? இது தான் திமுக அரசு கட்டிக்காக்கும் சமூக நீதியா ? சமத்துவமா ? இதற்கு பெயர் தான் திராவிட மாடலா ?

ஆகவே, தமிழக அரசு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் தங்கை டிலைட்டா ரவியை தாக்கிய காவல்துறையினரைப் பணி நீக்கம் செய்வதுடன், அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதுபோன்ற கொடுமைகள் இனியும் தொடரா வண்ணம் காவல்துறைக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். தற்போது திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தங்கை டிலைட்டா ரவி விரைந்து நலம்பெற விழைகிறேன்” என்று சீமான் தெரிவித்துள்ளார்.

x