புதுச்சேரியில் ஹால் டிக்கெட் வாங்க பள்ளி வந்த மாணவன் மாடியில் இருந்து குதித்து காயம்: தேர்வு பயம் காரணமா?


புதுச்சேரி: ஹால் டிக்கெட் வாங்க அரசு பள்ளிக்கு வந்த மாணவர் மாடியில் இருந்து குதித்து காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கல்வித்துறை விசாரணை நடத்தி வருகிறது.

புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளும் இக்கல்வியாண்டில் சிபிஎஸ்இ பாடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. முதல் முறையாக இம்முறை சிபிஎஸ்இ பொதுத்தேர்வை 10, 12ம் மாணவர்கள் எழுதுகின்றனர். புதுவை காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு பள்ளியில், ரெட்டியார்பாளையம், பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் கணிணி அறிவியல் சிபிஎஸ்சி பாடதிட்டத்தில் பயின்று வந்தார். இந்த நிலையில் இன்று ஹால் டிக்கெட் வாங்க மாணவன் பள்ளிக்கு வந்துள்ளார்.

அவர் முதல் மாடியில் இருந்து கீழே குதித்து காயம் அடைந்தததால் அவரை உடனடியாக அரசு பொது மருத்துவமனையில் ஆசிரியர்கள் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை தரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஹால் டிக்கெட்டில் கையொப்பமிடுவதற்காக பள்ளிக்கு சென்ற மாணவனின் தாயாரிடம், பள்ளி ஆசிரியர்கள் தங்கள் மகன் மயக்கம் ஏற்பட்டு திடீரென முதல் மாடியிலிருந்து கீழே விழுந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து மாணவரின் தாயார், மருத்துவமனைக்கு சென்று தன் மகனை பார்த்தபோது பிளேடால் கையை கிழித்துக் கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் ஆசிரியரிடம் கேட்டபோது, தேர்வு பயம் காரணமாக மாணவன் குதித்ததாக தெரிவித்தனர். ஆனால் அதற்கு மாணவணின் தாயார் மறுப்பு தெரிவித்து, தன் மகன் அதுபோன்று செய்யக் கூடியவன் அல்ல. பள்ளியில் ஏதோ நடந்துள்ளது. என்று கூறியுள்ளார்.

இதனிடையே மாணவனை பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், எம்எல்ஏ-க்கள் நேரு, வைத்தியநாதன், கல்வித் துறை இயக்குனர் பிரியதர்ஷினி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் மாணவனுக்கு தீவிரமாக சிகிச்சைகளை செய்ய வேண்டும் என மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினர். இதனிடையே மாணவன் தற்போது சுய நினைவு திரும்பியுள்ளார். இது சம்பந்தமாக கல்வித்துறை சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே, அரசு பள்ளி மாணவன் மேல்தளத்தில் இருந்து குதித்த விவகாரம் குறித்து கல்வி அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டதற்கு, முழுமையாக விசாரணை நடக்கிறது. அரசு பள்ளி மாணவன் குதித்ததற்கு முழுமையான காரணம் தெரியவில்லை. அவரிடம் நானே விசாரித்தேன். அவர் முழுமையாக பதில் கூறவில்லை. எந்த பாடத்திட்டமாக இருந்தாலும் மாணவர்களுக்கு பயம் இயல்பாக இருக்கும் தான். மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்படும்” என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

x